உயிரே உயிரே
உயிரே உயிரே, புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 160ரூ.
புராண காலத்தில் இருந்து இன்றுவரை எத்தனையோ காவியங்கள் பற்றி நாம் படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். புராணக் காதல்களையாவது வெறும் கட்டுக்கதை என்று நாம் நிராகரித்துவிடலாம். ஆனால் சரித்திர நாயகர்களின் காதல்களை அப்படி நிராகரித்துவிட முடியுமா? 40 வயது ஜின்னா, முஸ்லிம்களின் மாபெரும் தலைவர். 16 வயது ருட்டி பார்சி மதத்தைச் சேர்ந்த பெண். இருவரும் காதலித்து மணந்தனர். பிறகு பிரிந்தனர். எதிர்பாரதவிதமாக தனது 29 வயதில் ருட்டி மரணம் அடைகிறார். அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஜின்னா தன் இதயமே வெடித்துவிடும்படி கதறி அழுகிறார். வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அவர் அழுதது அப்போதுதான். இந்திரா காந்தியும், பார்சி மதத்தைச் சேர்ந்த பேரோஸ் காந்தியும் காதல் திருமணம் புரிந்து கொள்ள எவ்வளவோ எதிர்ப்புகள். மகாத்மா காந்தியின் தலையீட்டில் அவர்கள் திருமணம் நடைபெறுகிறது. ஆப்ரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, எட்டாம் எட்வர்டு (காதலுக்காக முடிதுறந்தவர்), நெப்போலியன், ஹிட்லர் முதலான 38 சரித்திர நாயகர்களின் உண்மைக் காதலை நாவலைப்போன்ற விறுவிறுப்புடனும் சுவையுடனும் எழுதியுள்ளார் மாலன். அபூர்வ புகைப்படங்களும்இடம் பெற்றுள்ளன. அருமையான புத்தகம்.
—-
கோடிகளை கொட்டித் தரும் 5ம் எண், குபேர கிருஷ்ணன், குபேரன் பதிப்பகம், 57, தெற்கு தண்டபாணி தெரு, தி.நகர், சென்னை 17, விலை 23ரூ.
எண் ஜோதிடத்தில் (நியூமராலஜி) 5ம் எண் முக்கியமானது. 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றின் கூட்டுத்தொகையில் 5ம் எண் ஆதிக்கம் கொண்டவர்களும் 5ம் எண்ணுக்கு உரியவர்கள். ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்களின் குணாதிசயங்கள் என்ன, அவர்கள் செய்யக்கூடிய தொழில் என்ன, அவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போது, எப்படி வந்து சேரும், ராசிக்கல் என்ன இப்படி அனைத்து விவரங்களையும் விவரிக்கிறது இந்நூல்.
—-
கடாபி வாழ்வும் வீழ்வும், பிரதீபா, நக்கீரன் பதிப்பகம்,105, ஜானிஜான்சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 30ரூ.
40 ஆண்டுகளுக்கு மேலாக லிபியா நாட்டை ஆட்சி செய்த கடாபியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூல் இது. சர்வாதிகாரியாக செயல்பட்டாலும் கடாபிக்கு லிபிய வரலாற்றில் இடம் உண்டு என்பதை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 5/12/12.