கண்ணன் கதைகள்
கண்ணன் கதைகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, பக். 134, விலை 130ரூ.
கண்ணன் கதைகள் என்றாலே, கரும்பு தின்கிற மாதிரிதான். கரும்பை எங்கே கடித்தாலும் இனிக்கும். கண்ணன் கதைகளில் எதைப் படித்தாலும் மகிழ்வும், பரவசமும் கூடும். இந்த நூலில் 26 கதைகள் கண்ணன் பெருமை பேசுகின்றன. முதல் கதை, அந்த மூன்று கத்திகள். அதிலேயே, உத்தமங்க மகரிஷிக்கு மனிதரின் இனவேற்றுமை, உயர்வு தாழ்வு காண்பது தவறு என்று கண்ணபிரான் பாடம் நடத்துகிறார். அவருக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்கும்தான். பாண்டவரை அழிக்க, ஐந்து தங்க அம்புகளை தன் தவ வல்லமையால் தோற்றுவிக்கிறார் பீஷ்மர். அவற்றைப் பிடிவாதமாக பெறுகிற துரியன், அர்ச்சுனனிடமே ஏன் ஒப்படைக்கிறான் என்பதை விவரிக்கிறது ஒரு கதை. கண்ணனையே எதிர்த்து அர்ச்சுனன் போரிடத் துணிவது ஏன் என எடுத்துரைக்கிறது இன்னொரு கதை. நாராயண பட்டத்திரி, பக்த ஜனாபாய், ஞானேஸ்வர் கதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. -எழுத்தாளர் கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 10/8/2014.
—-
சிறந்த இந்தியப் பெண் எழுத்தாளர் கதைகள், பட்டு.எம். பூபதி, ராஜராஜன் பதிப்பகம், சென்னை, பக். 254, விலை 180ரூ.
இவை பெண்களால் எழுதப்பட்ட கதைகள் மட்டுமல்ல, பெண்களின் பிரச்னைகளையும் பேசும் கதைகள். பிரிவினைக் கிணறு பத்மா சச்தேவ் எழுதிய டோக்ரி மொழிக்கதை. அகதிப் பெண்களுக்கு நேரும் பாலியல் அவலங்களைச் சொல்லும் கதை. அவளும்தான் வாசிரெட்டி சீதாதேவி எழுதிய தெலுங்கு கதை. மேலதிகாரியின் சீண்டல்களுக்கு ஆளாகும் அலுவலக அபலைகளை பற்றிய கதை. இந்த தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ள இரு தமிழ் கதைகளுமே அருமையானவை. ஒப்பனை திலகவதி எழுதியது. போக வேண்டிய தூரம் லதா ராமகிருஷ்ணன் (அநாமிகா) எழுதிய கதை. இரவில் வெகுநேரம் ஆன நிலையில் தனியாக வீட்டுக்கு போகவேண்டிய நிலையில் ஒரு பெண். இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய அவஸ்தை. வழியில் எங்கும் பொதுக்கழிப்பிடம் இல்லை. இந்த சங்கடங்களை நெகிழ வைக்கும்படி எழுதி உள்ளார். இவை எல்லாம் தமிழில் எழுதப்பட்டவையோ என்ற பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம், மொழிபெயர்ப்பு அத்தனை அருமை. படிக்க படிக்க பரம சுகம். -எஸ்.குரு. நன்றி: தினமலர், 10/8/2014.