கனவு மெய்ப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 29.
இந்நூலாசிரியர், இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றியவர். இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை படம்பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், இவற்றைக் களைந்து இந்தியாவை செழிப்பான ஒரு நாடாக ஆக்கிக் காட்டும் வழிகளை இந்நூலில் கூறியுள்ளார். வாசகர்களுக்குப் போரடிக்காமல் இருக்க, விறுவிறுப்பான நாவலாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் இறையருளால் பிரதமராகி, நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் கதைக்கரு. அதற்கு பி.ஜே. (பாப்பநாயக்கன்பாளையம் ஜெகந்நாதன்) என்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அவருக்கு எப்படி கடவுள் அருள் கிட்டுகிறது, அதற்குப் பின் அவரது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், அதன் விளைவாக அவர் அரசியலில் நுழைந்து, எம்.எல்.ஏ, முதலமைச்சர், எம்.பி., பிரதமர்… என்று படிப்படியாக முன்னேறுவது, ஒவ்வொரு கட்டத்திலும் அவர் சந்திக்கும் அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், ஊழல், மாநிலப் பிரச்னைகள், நதிநீர் பிரச்னைகள், அயல்நாட்டு உறவு, தீவிரவாதப் பிரச்னைகள்… என்று இன்றுள்ள பல பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு முன்னெடுத்துச் செல்கிறார். இதில் சிலவற்றுக்கு இவரால் கூறப்படும் தீர்வுகளும், அணுகுமுறைகளும் கருத்து வேறுபாடுகளுக்கு இடமளித்தாலும் நல்லவர் கையில் நாடு சென்றால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது இந்நூல். -பரக்கத். நன்றி: துக்ளக், 8/1/2014.
—-
இலக்கியத் திறனாய்வும் படைப்பு இலக்கியமும், முனைவர் ந. வெங்கடேசன், குகன் பதிப்பகம், 5, வி,கே.கே. கட்டடம், வடுவூர் 614019, பக். 208, விலை 150ரூ.
இலக்கியத் திறனாய்வு முறைகளையும், அதன் வகைகளையும், படைப்பு இலக்கியங்களையும், மேனாட்டு, நம் நாட்டுப் பார்வையில் இந்நூல் காட்டுகிறது. சிறுகதை, புதினம், கவிதை ஆகிய படைப்பிலக்கியம் பற்றியும், அதன் திறனாய்வு பற்றியும் இந்நூல் தெரிவிக்கிறது. ஆய்வு மாணவருக்கு இந்நூல் வழிகாட்டும். நன்றி: தினமலர், 19/1/14.