கயல் பருகிய கடல்
கயல் பருகிய கடல், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ.
கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, பத்திரிகை என்று எழுத்துலகில் பன்முகத்தன்மையுடன் பயணிக்கும் இந்நூலாசிரியர், பல்வேறு சமயங்களில் எழுதிய இலக்கியத் தரம் வாய்ந்த 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலை வாசிக்கும்போதே இவருக்கு பாரதி மீதுள்ள ஈர்ப்பை உணர முடிகிறது. பாரதியும் பாரதமும், பாரதியும் இஸ்லாமும், பாரதியின் மரணம் எழுப்பும் கேள்விகள் முதலான கட்டுரைகளில் மட்டுமல்ல, இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளிலுமே பாரதியின் தாக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதி, வ.வே.சு.ஐயர், கல்கி, புதுமைப் பித்தன், ஜெயகாந்தன் ஆகியோர் தங்களது எழுத்துக்களிலும், எண்ணத்திலும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை முதல் கட்டுரையில் விளக்கியுள்ளார். மூன்றாம் மரபு கட்டுரை ஆரம்ப காலம் முதலான தமிழ் நாவல்களின் வளர்ச்சிப் போக்கையும், முரண்பாடுகளின் நடுவே என்ற கட்டுரை தமிழ்ப் பத்திரிகைகளின் பரிணாமத்தையும் ஆராய்வதோடு பல்வேறு படைப்பாளிகளால் எழுத்துலகில் ஏற்பட்ட மாற்றங்களையும் விளக்குகிறது. கயல் பருகிய கடல் என்ற கட்டுரையில் ஆசிரியர் எழுப்பும் கேள்விகள் இன்றைய எழுத்தாளர்களை மட்டுமல்ல, வாசகர்களையும் சிந்திக்க வைக்கிறது. எல்லா கட்டுரைகளுமே இலக்கியத் தரம் வாய்ந்ததாகவும், ஆய்வுத் திறன் கொண்டதாகவும் அமைந்துள்ளது மிகச் சிறப்பானது. நன்றி: துக்ளக், 20/5/2015.