கலிங்கத்துப் பரணி
கலிங்கத்துப் பரணி, ஆ.வீ. கன்னைய நாயுடு உரை, முல்லை நிலையம், சென்னை 17, பக். 392, விலை 175ரூ.
ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவத பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த் தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன. எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால், படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடை போன்ற சீரான, அழகிய விளக்கவுரையும் தந்துள்ளார் இந்நூலாசிரியர். மேலும் பாடல்களில் இடம் பெற்றுள்ள பலவகை அணிகள், இலக்கணக் குறிப்புகள், ஒன்பது வகை சுவைகள், புறப்பொரள் துறைகள் போன்றவையும் முழுமையாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் தாழிசை முதற்குறிப்பு அகராதி கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. எவருடைய உதவியுமின்றி மாணவர்களுக்கு மட்டுமல்ல, பரணி படிக்க விழையும் அனைவருக்குமே இந்நூல் நல்ல வழிகாட்டி. எந்தக் காலத்துக்கும் படித்து சிலாகிக்க வைக்கும் அந்தக் கால பரணிக்கு இந்தக் காலத்துக்கேற்ப எழுதப்பட்ட உரை நூல். நன்றி: தினமணி, 22/10/2012.
—-
எம்.ஜி.ஆர். கவிதைகள், கவிஞர் பிறைசூடன், குமுதம் பு(து)த்தகம், பக். 174, விலை 110ரூ.
எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதரின் அன்பு, வீரம், கொடை உள்ளிட்ட அத்தனை பண்புகளையும் கவிதைகளாக வடித்திருக்கிறார் கவிஞர் பிறைசூடன். இக்கவிதைகள் எல்லாமே எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த காலத்தில் எழுதப்பட்டு, அவரால் பாராட்டப்பட்டு, அவரே நூல் வடிவமாக்கவும் விருப்பம் தெரிவித்திருந்தாராம். ஆனால் எம்.ஜி.ஆரின் மரணத்தால் அது நிறைவேறாமல் போய்விட்டது. அதன் பிறகு குமுதம் பு(து)த்தகம் வெளியீடு அதனை வெளியிட்டிருப்பது சிறப்பு. எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு இக்கவிதைகள் ஒரு வரப்பிரசாதம். நன்றி: குமுதம், 17/10/2012.