கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள்
கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள், தொகுப்பாசிரியர்-வே. குமரவேல், சங்கம் பதிப்பகம், சென்னை 1, பக். 560, விலை 350ரூ.
இதுவரை ஒரே ஒரு என்.எஸ்.கிருஷ்ணனைத்தான் தமிழ்க் கலையுலகம் தந்துள்ளது. அவரது ஒப்புயர்வற்ற கலைப் பணியை சிந்தனைச் செல்வத்தை இதுவரை தோன்றிய எந்த நடிகனிடத்திலும் தமிழகம் பெற்றதில்லை என்று கலைவாணரைப் பாராட்டி கருத்துத் தெரிவித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இதுபோல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலையுலகைச் சேர்ந்தவர்கள், இலக்கியவாதிகள், அரசியல் பிரமுகர்கள் கலைவாணரைப் பற்றி தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார் தொகுப்பாசிரியர் வே. குமரவேல். சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர் கலைவாணர். வசதிகள் எல்லாம் போய் வறுமையில் வாடும்போது கூட, தன்னிடம் பணம் இல்லாத நிலையில் அடுத்தவரிடம் வாங்கித் தர்மம் செய்யும் பெரிய மனது கலைவாணருக்கு இருந்திருப்பதை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. கலைவாணரின் நகைச்சுவை வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் மூடநம்பிக்கைகளுக்கும் பிற்போக்குத்தனத்துக்கும் சாவு மணியடிக்கிற வகையிலும், விழிப்புணர்வுக்கும், பகுத்தறிவுக்கும் வித்திடுவதாகவும், சமூக சீர்திருத்தத்தை வள்ர்ப்பதாகவும் இருந்திருப்பதை இந்த நூல் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. வே. குமரவேல் கலைவாணரை முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வண்ணம் இந்த நூலைத் தொகுத்தளித்திருக்கிறார். நன்றி: தினமணி, 10/6/13.
—-
பெண்பாற்புலவர்கள், கிளமெண்ட் ஈசுவர், லீலி பப்ளிகேஷன்ஸ், பூம்பொழில், 31, நேருநகர், புதுச்சேரி-605011, விலை 80ரூ.
மகளில் பெருமை பேசும் நூல் பெண்பாற்புலவர்கள். நூல் ஆசிரியர் கிளமெண்ட ஈசுவர், பெண்பால் புலவர்களின் தகவல்களை அரிது முயன்று தேடித் தொகுத்துள்ளார். சங்ககால பெண் புலவர்கள், பிற்காலப் புலவர்கள், தற்காலப் புலவர்கள் என 3 பிரிவுகளாக பெண்பாற் கவிஞர்களை பட்டியலிட்டிருப்பது சிறப்புக்குரியது. தற்கால புலவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த சவுந்தரா கைலாசம் மற்றம் கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோரின் குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. கவிஞர்களின் முக்கிய படைப்புகள், அவற்றின் விளக்கம், அவர்கள் பெற்ற விருதுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 27/3/13