சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு, மிஷல்தனினோ, கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 14, விலை 300 ரூ.

இந்திய இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதத்திலும், ஹிந்து மத வேதங்களிலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் நதிகளில் ஒன்று சரஸ்வதி நதி. இந்தியாவின் வடமேற்கே பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள வறண்ட பிரதேசத்தில், சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிய இந்த நதி, கால மாற்றங்களினால் பூமிக்குள் புதைந்து போனது. இந்நதி குறித்த பல்வேறு ஆய்வுகள் சில நூற்றாண்டுகளாக நடந்துகொண்டிருந்த நிலையில், சமீபத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமும், விஞ்ஞான ஆய்வுகள் மூலமும், இந்நதி இருந்ததற்கான தடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை இன்னும் தீவிரப்படுத்தினால், இந்தியா குறித்த வரலாற்றில்கூட சில சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிப்படும் என்கிறார் இந்நூலாசிரியர். ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர், பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி இந்திய கலாசாரம், நாகரிகம் போன்றவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் உருவானதுதான் இந்நூல். 400 பக்கங்களுக்கு மேல் பல்வேறு ஆவணங்கள், வரைபடங்களுடன் விரியும் எளிய தமிழாக்கமே இந்நூல்.
– பரக்கத்  

 

கம்பராமாயணம் உரைநடையில், அ. அறிவொளி, வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ண தெரு, தியாகராய நகர், சென்னை – 17, பக்கம் 912, இரு தொகுதிகள் – விலை 390 ரூ.

  இந்திய மொழிகள் அனைத்திலும் இடம் பெற்றிருப்பது இராமாயணம். அதிலும் தமிழில் தோன்றிய கம்பராமாயணம், மூல நூலான வால்மீகி இராமாயணம் போன்ற சிறப்புடையது. சில இடங்களில் மூல நூலினையும் விஞ்சும் வகையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், தன் இராமாயணத்தைப் படைத்துள்ளார் என அறிஞர் கூறுவர். பாத்திரப் படைப்பிலும் இயற்கை வருணனையிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தருவதிலும், உவமைகளைக் கையாள்வதிலும் கம்பருக்குத் தமிழ் சொற்கள் அற்புதமாகக் கை கொடுக்கின்றன. கதை சொல்லும் திறனிலும் கம்பர் நிகரற்று விளங்குகிறார். இம்மாபெரும் காப்பியக் கதையை தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய உரைநடையில் தந்துள்ளார் அ. அறிவொளி. காப்பியக் கதையை அறிந்துகொண்டால்தான் பிற இயல்புகளை, சிறப்புகளை, மேன்மைகளை உணர்ந்து அனுபவிக்க முடியும் எனும் நோக்கத்தோடு கம்பராமாயணக் காப்பியக் கதையை 112 தலைப்புகளில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். 50 ஆண்டுகளாகக் கம்பனில் அனுபவம் பெற்றவரின் சீரிய படைப்பு இது.

நன்றி: துக்ளக் 03-10-12   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *