சுவாமி விவேகானந்தர் வரலாறு
சுவாமி விவேகானந்தர் வரலாறு, அ.லெ. நடராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 655, விலை 360ரூ.
சுவாமி விவேகானந்தரின் தெய்வீக வலாற்றைக் கூறும் இந்நூலைத் தொடர்ந்து படிக்கும்போது சாதாரண மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பசி, பட்டினி, வறுமை, குடும்ப சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்கு, ஏளனம், பரிகாசம், அவமதிப்பு அத்தனையையும் சுவாமி விவேகானந்தர் சந்தித்தார் என்பது தெரிகிறது. அதேபோல் 11/9/1983இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றுவது வரையிலும் கூட அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். உள்நாடாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி எவர் முன்னிலையிலும் தனது மனதில் சரியெனப்பட்டதையும் தயக்கமின்றி ஆணித்தரமாக எடுத்துரைப்பதில் விவேகானந்தர் மாபெரும் வீரராக மகத்தான ஞானியாக விளங்கினார். ஜாதி உணர்வைக் கடந்து ஒழுகும் பரிபக்குவம் தனக்கு இருக்கிறதா என்பதை ஒவ்வொரு கணமும் சந்நியாசி கவனிக்க வேண்டும் என்கிறார். அவரது வார்த்தைகளில் தெய்வ பக்தி மட்டுமின்றி, தேச பக்தியும் பின்னிப் பிணைந்திருந்ததை உணர முடிகிறது. இமயம் முதல் குமரி வரை பயணம் செய்து ஆன்மிக யாத்திரை புரிந்த சுவாமி விவேகானந்தரின் பெருமையை முதலில் உணர்ந்து, அவரைக் கொண்டாடிப் போற்றியவர்கள் சென்னை வாசிகள் என்பதை அறியும்போது தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளலாம். இந்தப் புத்தகம் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய பொக்கிஷம். நன்றி: தினமணி, 13/1/2014.
—-
வாழ்ந்து படிக்கும் பாடங்கள், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், எண் 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 110ரு.
கற்பனையில்கூட எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறி இருக்கிறது. ஆனால் சமூக சீர்கேடுகள் பெருகிவிட்டன. அறிவியலில் அற்புதங்களை எட்டியபோதிலும், மனிதனின் மனதில் மகிழ்ச்சி இல்லை. அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களே இன்றைய மனிதன் தேடும் நிறைவான வாழ்க்கைக்கு ஆதாரமாக அமையும் என்பதை எழுத்தாளர் என். கணேசன் இந்த நூலில் விளக்கியுள்ளார். நிறைவான வாழ்க்கை வாழ நிறைய செய்திகள், சோதனைகளை வென்றெடுக்க பல சாதனை நிகழ்ச்சிகள். நன்றி: தினத்தந்தி, 8/1/2014.