மரபும் மரபு சார்ந்தும்

மரபும் மரபு சார்ந்தும், முனைவர் ஓ. முத்தையா, காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை 24, பக். 204, விலை 160ரூ.

கள்ளிக்காட்டில் முள்ளை வெட்டி அடுக்கிக் கொண்டிருந்த வேலாயி இடுப்புவலி எடுத்து வேலி மறைவில் தனது மூன்றாவது பிள்ளையைத் தனியாளாய் பெற்றெடுத்தாள். மரபு அவளுக்கு அத்தகைய வலிமையைக் கொடுத்திருக்கிறது. இன்றைய நவீன மருத்துவம் தாய்க்கும் பிள்ளைக்கும் தனித்தனியே கட்டணம் வசூலித்து கட்டாயக் கத்திரி போடுகிறது. மரபு தரும் இந்த வலிமையையும் துணிச்சலையும் மண்மூடிப் போகும்முன் பாதுகாக்கவாவது செய்யலாமே? என்பதுதான் நூலாசிரியரின் வேண்டுகோள். நாட்டுப்புற ஆய்வு மாணவர்களுக்குப் பயனுள்ள நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 17/10/2012.  

—-

 

எண்ணெய் மற மண்ணை நினை, வந்தனா சிவா, தமிழில்-போப்பு, பூவுலகின் நண்பர்கள், சென்னை 26, பக். 212, விலை 120ரூ.

உலகம் எங்கும் உற்பத்தி முறை மாறிவிட்டது. இது நமது கலாசாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் எல்லாரும் நிலத்திலிருந்து அந்நியப்பட்டவர்களாக மாறிவிட்டோம் என்று கூறும் நூல். புவி வெப்பமாதல், பருவப் பிறழ்வு போன்றவை சுற்றுச் சூழலை நாம் காக்கத் தவறிவிட்டதால் இயற்கை நமக்குத் தந்துள்ள தண்டனைகளாகும் என்றும், இயற்கையுடன் இயைந்து செல்வது ஒன்றுதான் மனித குலத்தின் முன் உள்ள ஒரே சரியான பாதை என்றும் கூறும் நூல். உலகின் இயக்கத்துக்கு அவசியமான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் முதற்கொண்டு வானத்தில் ஓசோன் மண்டலத்தில் ஏற்படும் ஓட்டை வரை ஒன்றிற்கொன்று இருக்கும் தொடர்புகளை இந்நூலில் நூலாசிரியர் வந்தனா சிவா விளக்கியிருக்கிறார். ஒன்றில் ஏற்படும் பாதிப்பு ஒரு சங்கிலித் தொடர்போல பிறவற்றையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார். நமது விவசாயமுறை சுயசார்பான விவசாயமாக இருந்ததுபோய், விவசாயம் தொழிற்சாலைகளை அவை தரும் உரத்தை பூச்சிக்கொல்லி மருந்துகளை, விதைகளைச் சார்ந்து இயங்கத் தொடங்கியதே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணம். விவசாயத்தை, உணவைத் தொழில் மயப்படுத்தியதால் மனித குலம் இன்று சுய அழிவின், சுய விலகலின் சறுக்குப் பாதையில் நிற்கிறது என்கிறார் நூலாசிரியர். காந்திய சூழலிய, அரசியல், பொருளாதாரப் பார்வையின் அடிபப்டையில் எழுதப்பட்டிருக்கும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 22/10/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *