சென்றுபோன நாட்கள்
சென்றுபோன நாட்கள், எஸ்.ஜி.இமானுஜலு நாயுடு, ஆ.இரா வேங்கடாசலபதி வெளியீடு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 125ரூ.
இதழியல் பக்கங்கள் தன் 17வது வயதில் பத்திரிகை தொடங்குவது என்பதை யாரேனும் நினைத்துப்பார்த்திருக்க முடியுமா? 1904ல் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு நினைத்துப் பார்த்ததுடன் பிரஜாநுகூலன் என்ற மாத இதழையும் ஆரம்பித்திருக்கிறார். இந்த இதழை நடத்தினாலும் சுதேசமித்திரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதியவராகவும் பங்களித்தவராகவும் இவர் இருந்திருக்கிறார். 1926ல் இவர் ஆசிரியராக அமர்ந்த ஆநந்தபோதினி இவருக்குப் பேரும் புகழும் பெற்றுத்தந்தது.1934ல் இந்தப் பத்திரிகையிலிருந்து விலகிய கொஞ்சநாளிலேயே இவர் மரணம் அடைந்தார். இவரைப் பற்றிக் கிடைக்கும் ஆவணங்களை பல ஆண்டுகள் ஆராய்ந்து, மிக அழகான நூலாக்கித் தந்திருக்கிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, பாரதியைப் பற்றி எஸ்.ஜி. இராமானுஜலு நாயுடு எழுதிய கட்டுரையை கிளாசிக் என்று வர்ணிக்கும் சலபதி, அத்துடன் சென்றுபோன நாட்கள் என்ற தலைப்பில் அந்த காலப் பத்திரிகையாளர்கள் பதினெட்டு பேர் பற்றி இராமாநுஜலு நாயுடு எழுதிய கட்டுரைகளை இந்த நூலில் பதிப்பித்துள்ளார். தமிழ் இதழியல் வரலாற்றை மீட்டுருவாக்கி செழுமைப்படுத்தும் தகவல்களாக இவை உள்ளன. வி. நடராஜ அய்யர் என்பவர் முதல் வ.ரா. வரையிலான பதினெட்டு பத்திரிகையாளர்கள் பற்றி அழகான நடையில், துல்லியமான தகவல்களுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் இராமநுஜலு நாயுடுவின் எழுத்துத் திறனை விளக்குகின்றன. பாரதி ஆய்வாளர்களால் மட்டுமே அறியப்பட்டவராக இருந்த இவரை இப்போது எல்லோராலும் அறியப்பட்டவராக ஆக்க பதிப்பாசிரியர் மேற்கொண்டிருக்கும் உழைப்பு மலைக்க வைக்கிறது. – செப்டம்பர், 2015. நன்றி: அந்திமழை.