டெக்னாலஜி ஆப் டேங்க்ஸ்
ராஜராஜ சோழன் உருவாக்கிய செம்பரம்பாக்கம் ஏரி,(Technology of Tanks The Traditional Water Bodies of Rural India). சி.ஆர்.சண்முகம், ஜே. கனகவல்லி, ரிப்ளக் ஷன் புக்ஸ், பக். 320, விலை 500ரூ.
பாசனத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகள் எல்லாம், சமீப காலங்களில் நிர்மானிக்கப்பட்டவை அல்ல. அவை நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்து. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரி, மூன்றாம் நந்திவர்ம பல்லவனால் (கி.பி. 710-750) உருவாக்கப்பட்டது. சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, ராஜராஜசோழனால் (கி.பி. 1216-1256) உருவாக்கப்பட்டது. தென் ஆற்காடு பகுதியில் உள்ள வீராணம் ஏரி, கி.பி. 10ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் பராந்தக சோழனால் தோற்றுவிக்கப்பட்டது. அவற்றை உருவாக்கிய மன்னர்களோ, வட்டார தலைவர்களோ அவற்றின் பரமாரிப்பு, மேலாண்மை ஆகியவற்றை அந்தந்த பிராந்தியத்து பயனாளிகள் வசம்விட்டுவிட்டனர். குடிமராமத்து என்ற மரபின் கீழ், பன்முகப்படுத்தப்பட்ட நீர்நிலை நிர்வாகம், மிக ஒழுங்காகவே இருந்து வந்திருக்கிறது. அந்த நீர்நிலைகளை தோற்றுவித்த மன்னர்கள், தலைவர்கள் இடையே சண்டை சச்சரவு வந்தபோதும் கூட, குடிமராமத்து நிர்வாகம் பாதிக்கப்படவே இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில், 1819ம் ஆண்டு, சூப் பிரின்டென்டெண்ட் ஆப் டேங்க் ரிப்பேர்ஸ் என்ற புதிய துறையை உருவாக்கினர். நீர்ப்பாசன முறையை பற்றி ஒன்றும் தெரியாத அவர்கள், அந்த துறையை உருவாக்கியதன் காரணம், விவசாயிகள் மீது தங்களுக்கும் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்வதற்குதான். நாளடைவில், பன்முகப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை, ஒருமுகப்படுத்தும் முயற்சியில் பிரிட்டிஷார் இறங்கவே, குடிமராமத்து முறை மெல்ல அழிந்தது. கடந்த, 1952ல், பிரதமர் நேரு, நீர்ப்பாசன முறைகளின் அத்தியாவசியத்தை உணர்ந்து, திட்டக் கமிஷனின் முதல் கூட்டத்திலேயே அதை பற்றி அறிவித்தார். அதன் பின்தான், நாடு முழுவதும் பெரிய அளவிலான நீர்ப்பாசன திட்டங்கள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் தற்போது சிறுசிறு நீர்ப்பாசன முறைகளை சீரமைக்கும் பணி, சூடு பிடிக்க துவங்கியுள்ளது, நல்ல அறிகுறி. ஏரிகளையும், குளங்களையும் தூர்த்து, பிளாட் போட்டு கல்லா கட்டும் இன்றைய அவலமான சூழலில், நீர்நிலைகளை பராமரித்து காக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில், இந்த நூல் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நூலில் மொத்தம் 12 அத்தியாயங்கள் உள்ளன. மூன்றாம் அத்தியாயம் முதல், அனைத்தும் தொழில்நுட்ப கணக்குகளின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் நூல், பாடப்புத்தக வடிவிலேயே அமைந்துள்ளது. அதேநேரம், பொதுப்பணி, துறையில், நீர் மேலாண்மை குறித்த ஆர்வமுள்ளவர்களுக்கும், நீர்நிலைகள் உருவாக்கும் பொறுப்பில் உள்ளோருக்கும், இந்த நூல் பயன்படும். நூலாசிரியர்களின் அசுர உழைப்பும், துவண்டு விடாத தொடர் முயற்சியும் மிகவும் பாராட்டுக்குரியவை. இந்த நூல், தமிழிலும் வெளிவந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். -சிவா. நன்றி: தினமலர், 29/6/2014.