தனிநாயக அடிகளாரின் படைப்புகள்
தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127/63, பிரகாசம் சாலை, சென்னை 108, பக். 397, விலை 200ரூ.
இலங்கையில் பிறந்து, தமிழகத்தில் கல்வி கற்றத் தமிழ் மொழியின் சிறப்பை, உலகம் அறியச் செய்த பெருமைக்குரியவர் தவத்திரு தனிநாயக அடிகள், அவரின் நூற்றாண்டு விழா நினைவாக வெளிவந்திருக்கிறது இந்நூல். இந்த நூலில் உள்ள ஐந்து கட்டுரைகளில் பயணக் கட்டுரையான ஒன்றே உலகம் தவிர, மற்ற நான்கும் தமிழ் இலக்கியம், பண்பாடு பற்றியவை. அடிகள் தாம் மேற்கொண்ட உலகப் பயண அனுபவங்கள் குறித்துச் சொல்லியுள்ள தகவல்கள், மிகுந்த பயனுடையவை. கிரேக்க நீதி இலக்கியம், புத்தரின் கருத்தியல் முதலியவற்றோடு திருக்குறளை ஒப்பிட்டிருக்கும் சிறப்பைத் திருவள்ளுவர் பற்றிய கட்டுரையில் காணலாம். மேலும், புத்த நூல்களோடு, பண்டைய தமிழ் இலக்கியத்தை ஒப்பிடும்போது, புத்த நூல்கள் துறவறத்தின் சாசனமாக விளங்க, பண்டைத் தமிழ் நூல்கள் இல்லறத்தின் சாசனமாக விளங்குகின்றன என்று, கூறும் கருத்தும் ஆழமாகச் சிந்திக்கப்பட்டுள்ளது. தமிழர் பண்பாடும், அதன் சிறப்பியல்புகளும் என்ற கட்டுரை, பண்பாடு பற்றிய விளக்கத்தைத் துல்லியமாக ஆராய்கிறது. தமிழரிடம், மக்கள் நலக் கொள்கை சிறப்பாக நிலவியிருந்ததை எடுத்துக்காட்டுகளுடன் தருகிறது. தமிழ்த் தூது என்ற இறுதிப் பகுதி, எட்டுக் கட்டுரைகள் அடங்கிய தனித் தொகுதியாக உள்ளது. -ராம. குருநாதன்.
—-
மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும், டாக்டர் எஸ். சுவாமிநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 300, விலை 245ரூ.
உலகில் அதிக கால்நடைகள் எண்ணிக்கை நம் நாட்டில் இருந்தபோதும், அவற்றின் மூலம் கிடைக்கும் பணவரவு, அல்லது செழுமை முழு அளவில் இல்லை என்பதே உண்மை. அக்கண்ணோட்டத்தில் தற்போது எழும் பல வினாக்களுக்கு, உரிய அடிப்படை பதில், மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் அவற்றை சீராக்கும் வழிகளாகும். அதை இந்த நூல் தெளிவாக தருகிறது. தற்போது எல்லாருக்கும் கோமாரி நோய் பாதிப்பு கறவை மாடுகளை பாதித்திருப்பது பற்றி தெரியும். பால் கறக்கும் தொழிலில் இருப்போருக்கு கைகளில் ஏற்படும் பரு பாதிப்பை கணுநோய் என்று கூறி, அதுபோன்ற பல விஷயங்கள் இந்த நூலில் சிறப்பாக தரப்பட்டிருக்கின்றன. நன்றி: தினமலர், 19/1/14.