நாடக மேடையும் திரை உலகமும்

நாடக மேடையும் திரை உலகமும், ஏ.எல்.எஸ். வீரய்யா, திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, விலை 75 ரூ

கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவான இந்நூலாசிரியர், சுமார் 50 ஆண்டுகள் சினிமாத் துறையிலும், அதற்கு முன் சில ஆண்டுகள் நாடகத் துறையிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவர். அந்த அடிப்படையில் இவ்விரு துறைகளைப் பற்றிய தனது சுவாரஸ்யமான அனுபவங்களையும், மற்ற பல செய்திகளையும் தொகுத்து அவ்வப்போது புத்தகங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இந்நூலிலும் வியப்பான, சுவையான பல செய்திகளை துணுக்கு வடிவிலும், சிலவற்றை கொஞ்சம் விளக்கமாகவும் தொகுத்துத் தந்துள்ளார். நூறு ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் இல்லாத கட்டத்தில், தீப்பந்தங்களின் துணைகொண்டும், பிறகு ‘பெட்ரோமாக்ஸ்’ கண்டுபிடிக்கப்பட்டபின் அந்த வெளிச்சத்திலும் நாடகங்கள் நடந்தன. அப்போது தமிழகத்தின் நாடகத்துறையில் முதல் கதாநாயகியாகவும், முடிசூடா அரசியாகவும் திகழ்ந்தவர் பாலாமணி அம்மையார். அந்த காலகட்டத்தில் இவர் மிகுந்த செல்வத்தோடும், மக்கள் செல்வாக்கோடும் வறியவர்களுக்கு கணக்கின்றி வாரி வழங்கும் ஈகை குணத்தோடும், சூப்பர் ஸ்டாராக விளங்கியதைக் குறிப்பிடும் இந்நூலாசிரியர், அவரது இறுதி காலத்தின் வறிய வாழ்க்கையும், அவரது ஈமச்சடங்குகள் நடந்த விதத்தையும் குறிப்பிடும்போது படிப்பவர்கள் மனதை கசக்கிப் போடுகிறது. இப்படி பல தகவல்கள் அன்றைய நாடகம், சினிமா ஆகிய இரு துறைகள் குறித்தும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. – பரக்கத் நன்றி: துக்ளக், 19/09/2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *