நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், வசந்தா பிரசுரம், சென்னை, விலை 220ரூ.

தமிழ்த் திரையுலகில், சாதனை படைத்த இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ.சி. திருலோகசந்தர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இயக்கிய படங்கள் 65. அதில் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் 25. “ஏவி.எம்.” பட நிறுவனத்தை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் “அன்பே வா”. அதை இயக்கியவர் திருலோகசந்தர். இவர் தயாரித்த “பத்ரகாளி” படத்தின் கதாநாயகி ராணி சந்திரா, படம் முடிவடைவதற்கு முன் விமான விபத்தில் இறந்து போனார். படத்தைக் கைவிட்டால், பல லட்சங்கள் நஷ்டம் ஏற்படும். ஆனாலும் திருலோகசந்தர் சோர்ந்து போய்விடவில்லை. ராணி சந்திராவைப் போலத் தோற்றமுள்ள ஒரு நடிகையை தேர்வு செய்து, மீதிப்பகுதியை திறமையாக எடுத்து முடித்தார். படவுலகம் அதுவரை அறிந்திராத துணிகர முயற்சி. “பத்ரகாளி” சிறந்த படமாக அமைந்து, மிக வெற்றிகரமாக ஓடியது. ஏவி.எம்.சரவணனும், திருலோகசந்தரும் நட்புக்கு இலக்கணம் வகுத்த நெருங்கிய நண்பர்கள். தன் நண்பரை பற்றி சரவணன் அரிய தகவல்களை நெஞ்சம் நெகிழ கூறுகிறார். பிரபல டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் திருலோக சந்தரின் சீடர். அவரும், நடிகர் சிவகுமார், சாதனை படைத்த கதை – வசனகர்த்தா ஆசிரியர் ஆரூர்தாஸ் ஆகியோரும் பல அரிய தகவல்களைக் கூறுகிறார்கள். சுயவரலாற்றுப் புத்தகங்களில் இது தனிச்சிறப்பு வாய்ந்தது. ஒரு சிறந்த டைரக்டரின் அனுபவங்களை மட்டுமின்றி, தமிழ்த்திரைப்பட வரலாற்றின் ஒரு பகுதியையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 11/2/2015.  

—-

பாரதியார்?, ஜெயஜோதி பதிப்பகம், ஜோதி நிலையம், பம்பாய், விலை 70ரூ.

சங்க காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் தோன்றிய மாபெரும் கவிஞர் பாரதியார். அவர் மீது மிகுந்த பக்தி கொண்ட பம்பாய் ஜெயக்கண்ணன், பாரதியின் பெருமைகளைப் போற்றும்வண்ணம் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். பாரதியாரின் சிறந்த கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பாஞ்சாலி சபதம் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழன்பர்கள் படித்து மகிழவும், பாதுகாக்கவும் வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 11/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *