பின் நவீனநிலை – இலக்கியம் அரசியல் தேசியம்

பின் நவீனநிலை – இலக்கியம் அரசியல் தேசியம், அ. மார்க்ஸ், புலம் வெளியீடு, 332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5. விலை ரூ. 380

90களில் சோவியத் ரஷ்யா உடைந்து சிதறியபோதுதான் கம்யூனிஸ்ட்கள் பலருக்குக் கனவு கலைய ஆரம்பித்தது. ‘ராட்சச’ ஜார் ஆட்சியை வீழ்த்தி எழுந்த ‘ரட்சக’ ரஷ்யா அனைத்து மக்களுக்குமான பூலோகமாகத்தான் இருக்க முடியும் என்று அனைவரும் கருதினர். ஆனால் அடக்கப்பட்ட தேசிய இனங்களுக்குள் கிளம்பிய முரண்பாடுகள் ஒரு பெரிய தேசத்தையே சின்னச் சின்னதாய் உடைக்கத் தொடங்கியது. அந்த தத்துவத்தைப் பின்பற்றியவர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால் தங்களது சிந்தனைகளை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தனர். தமிழகத்தில் ‘நிறப்பிரிகை’ இதழ் மூலமாக நீண்ட விவாதங்களை,  ஆக்கபூர்வமான விமர்சனங்களைத் தொடங்கினர். கூட்டு விவாதங்கள் நிறைய நடந்தன. அதன் மையப்புள்ளியாக இருந்தவர் அ. மார்க்ஸ். இயற்பியல் பேராசிரியரான அ. மார்க்ஸ் தமிழ் அறிவுச்சூழலுக்குள் பின் நவீனத்துவம் தொடங்கி தேசியம் வரை பல்வேறு புதிய சிந்தனைகளை விதைத்தார். ‘சோஷலிசக் கட்டுமானச் சிதைவுகள் பெரிய அளவில் அதிர்ச்சியையும் சோர்வையும் ஏற்படுத்தி இருந்தபோதிலும் அந்த அடிப்படையில் விவாதங்கள் மேற்கொள்ளுதல், இறுக்கமான பழைய நம்பிக்கைகளைத் தாண்டி சற்றே நெகிழ்வுடன் சிந்தித்தல், மாற்றுக் கருத்துடையோருடன் உரையாடுதல் என்ற ஒரு நிலை அன்று உருவாகி இருந்தது’ என்று அ. மார்க்ஸ் சுட்டிக்காட்டும் 1990 காலகட்டத்தில் இருந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் முழுத்தொகுப்பு இது. பின்நவீனத்துவச் சிந்தனைகளை வைத்து அரசியல், இலக்கியம், சமூகம் ஆகிய மூன்றையும் எப்படிப் பார்ப்பது என்பதே இந்தக் கட்டுரைகளின் அடித்தளம். கலாசாரம், பண்பாடு என்ற பூச்சுக்களின் மறைப்பில் செய்யப்பட்ட அத்தனை அடக்குமுறைகளையும் கேள்விக்கு உட்படுத்துகிறார். அடக்கப்படுகிற வெள்ளை இனப்பெண்ணும் நீக்ரோ இனப்பெண்ணும் ஒன்றா என்ற கேள்வியில் தொடங்கி, எதையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாத சமூக யதார்த்தத்தைச் சொல்கிறார். மிகமிக நுட்பமான வேறுபாடுகளுக்குள்தான்  மொத்தச் சமூகமும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அனைத்துக்கும் தனித்தனியான பார்வைகளே வேண்டும் என்பதும் இவரது கணிப்பு. ஒவ்வொரு விஷயத்தையும் அ. மார்க்ஸ் பார்க்கும் பார்வையே இந்தப் புத்தகத்தின் அடித்தளம். உதாரணத்துக்கு ஹோமியோபதி சம்பந்தமான கட்டுரையைச் சொல்லலாம். ‘மார்க்சியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஹோமியோபதியில் ஈடுபாடு காட்டுவதன் நியாயத்தை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. இரண்டுமே நிலவுகிற அமைப்பின் வன்முறையை விமர்சித்து எழுந்த மாற்று நடைமுறைகள். கார்ல் மார்க்ஸைப் போலவே சாமுவேல் ஹானிமனும் மானுட வரலாறு கண்ட மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவர், மூலதனத்தைப் போலவே ஆர்கனானும் உலகின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்று’ என்று எழுதுகிறார். ‘நமது மதம், அறம், தத்துவம் என்பனவெல்லாம் மனித இழிவின் வடிவங்கள். இவற்றுக்கான எதிர் இயக்கமே கலை’ என்றார் நீட்ஷே.  அத்தகைய கலையை உருவாக்கும் கட்டுரைகளே இவை! – புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 28.11.12    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *