2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்பிரமணியன் சுவாமி; தமிழில்: சேக்கிழான், பக்.260, கிழக்கு பதிப்பகம், சென்னை – 14. விலை ரூ.195 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-703-9.html
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து இன்று இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஓரளவு தெரியும். ஆனாலும், இந்த ஊழல் எப்படி நடந்தது, எந்தெந்த தருணங்களில் அம்பலப்பட்டது, யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போனது குறித்து விவரமாகத் தெரிந்தவர்கள் மிகச் சிலர்தான். தற்போதைய இந்த மொழிபெயர்ப்பு – இந்த ஊழலை மிக நுட்பமாகவும் ஊழலின் பணம் எவ்வாறு மொரீஷியஸ் தீவுகள் சென்று அங்கிருந்து இந்திய முதலீடாக வந்து சேருகின்றன என்பதையும் மிகத் தெளிவாக விளக்குகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அவரது அரசியல் வாழ்வில் ஒவ்வொரு இந்தியனும் அவரை நினைவுகூரப் போவதும், நன்றி சொல்லப்போவதும் 2ஜி ஊழலை அம்பலப்படுத்த அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகத்தான் இருக்கும். இந்தப் புத்தகம் ஒரு தொடக்கம் மட்டுமே. இந்த வழக்கில் வெற்றி கிடைத்தாலும், ஆதாரம் இல்லை என்று தள்ளுபடியானாலும் அதற்குக் காரணமானவர்கள் குறித்தும் அவர்கள் செய்த சேவை குறித்தும் பாகம்-2 ஆக எழுதவேண்டிய அவசியம் இருக்கிறது.
—
பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே, துளசி. இராமசாமி, பக்.887, வெளியீடு: விழிகள், வேளச்சேரி, சென்னை – 42; விலை ரூ.700
பழந்தமிழ் இலக்கிய நூல்களைத் ‘தொகை நூல்கள்’ என்றே வழங்குவர். தொகைநூற் பாடல்கள் அனைத்தும் தனித்தனிப் பாடல்கள். தொகை நூல்கள் எங்கிருந்து, எதிலிருந்து தொகுக்கப்பட்டன என்ற வினாவை எழுப்பி, முன்புள்ள நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விடையும் தந்துள்ளார் தமிழறிஞர் கா.சிவத்தம்பி. தனித்தனிப் பாடல்களின் தொகுப்பாக இருந்தவை அடிவரையறையால் குறுந்தொகை, நடுத்தொகை, நெடுந்தொகை, புறத்தொகை என வகைப்படுத்தப்பட்டன. இத்தகைய நூல்களே பழந்தமிழ் இலக்கியங்களாகும். தொகை நூற் பாடல்களான பழந்தமிழ் இலக்கியங்களுள் அகப்பாடல்கள் 945, புறப்பாடல்கள் 248; ஆக பழந்தமிழ் தொகைப் பாடல்கள் மொத்தம் 1193 மட்டுமே. இவை பாணர் பாடியதோ, புலவர்கள் பாடியதோ இல்லை; முழுக்க முழுக்க மக்களின் வாய்மொழிப் பாடல்களாகும். அதாவது நாட்டுப்புறப் பாடல்களாகும். இதில் பாணர்கள் பாடிய இடைச்செருகல் பாடல்கள் மிக மிகக் குறைவு. புலவர்கள்தான் அதிக அளவில் இடைச்செருகல் பாடல்களைப் பாடியுள்ளனர். இவ்வாறு வாய்மொழிப் பாடல்களாக – நாட்டுப்புறப் பாடல்களாக இருந்தவற்றை ஒன்றுசேர்த்து தொகுத்த பெருமை சமண முனிவர்களையே சாரும். இத்தொகுப்புகளிலிருந்து பாடல்களை எடுத்தும், புதிதாகப் பாடல்களை எழுதிச் சேர்த்தும் – இறையனார் அகப்பொருளுரை காலத்தில் – வைதிகச் சமயத்தார் இன்றைக்குள்ள தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டு சமயத்தார் தொகுப்புகளிலும் திணை, துறை போன்றவை இடம்பெறவில்லை. ‘இறையனார் அகப்பொருளுரையும் சங்க நூல்களும்’, ‘தொகை நூல்களின் முதல் பதிப்பு வரலாறு’, ‘எழுத்துப் பண்பாட்டில் தொகை நூல்கள்’, ‘பழந்தமிழ்ப் பாடல்கள் வீரநிலைப் பாடல்களா?’ அவை பாடப்பட்டவையா? எழுதப்பட்டவையா?, ‘பாணரும் புலவரும்’ முதலிய தலைப்புகளில் தான் எடுத்துக்கொண்ட கருதுகோளுக்கு ஏற்ப தகுந்த தரவுகளோடு ‘பழந்தமிழ் நூல்கள் நாட்டுப்புறப் பாடல்கள்தான்’ என்பதை நுணுகி ஆராய்ந்து, தீர்க்கமான முடிவை முன்வைத்துள்ளார் நூலாசிரியர். சிறந்ததொரு ஆய்வுத்தொகுப்பு.