அகம் பொதிந்தவர்கள்

அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் 608001, பக். 160, விலை 75ரூ.

மகாகவி பாரதியார் தொடங்கி எழுத்தாளர் மாஜினி வரை தன் மனம் கவர்ந்த, தான் நேரில் பார்த்துப் பழகிய, பழகத் தவறிய 26, எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்கள், அவர்களைப் பற்றிய தனது கருத்துகள் போன்றவற்றை சுவையாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். எழுத்தாளர்கள் எழுதிய நூல்களின் பட்டியல், அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு போன்ற தெரிந்த தகவல்களையே சொல்லி நம்மைச் சலிப்படைய வைக்காமல், அவர்களை தான் சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள், சந்திக்காத சிலருடைய படைப்புகள் தன்னை பாதித்த விதம் போன்றவற்றை மிகையான வர்ணனையின்றி இயல்பாகச் சொல்லியிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மனின் மரபில் வந்த ஜெகவீரபாண்டியனார் சிறந்த கவிஞராக விளங்கியது. இதயநாதம் சிதம்பர சுப்பிரமணியம் வாகினி ஸ்டுடியோவில் மேலாளராகப் பணிபுரிந்தது, வைகையாற்று மணலில் காலில் செருப்பில்லாமல் நூலாசிரியர் தவித்தபோது எழுத்தாளர் நா.பா. தன் தோளிலிருந்த துண்டை மணலில் போட்டு அதில் நிற்கச் சொன்னது, எழுத்தாளர் மாஜினி தேசிய இயக்க ஊர்வலத்தில் கலந்து கொண்டு 308 போலீஸ் அடக்குமுறை ஒழிக என்று அவருடைய தந்தையான போலீஸ்காரரின் 308 எண்ணைக் குறிப்பிட்டு கோஷமிட்டது போன்ற பல தகவல்கள் வியப்பூட்டுபவை. பாரதி, பாரதிதாசன் போன்று அதிகம் அறியப்பட்டவர்களைப் பற்றி கூட பல அறியப்படாத தகவல்களும் சரஸ்வதி விஜயபாஸ்கரன், உதயம் கன்னிக்கண்ணன் போன்ற அதிகம் அறியப்படாதவர்களைப் பற்றி வியப்பளிக்கும் தகவல்களும் இந்நூலில் உள்ளன. கடந்த கால எழுத்தாளர்களைப் பற்றி அறிய உதவும் அரிய நூல். நன்றி; தினமணி, 2/9/2013.  

—-

 

திருமணப் பொருத்தங்கள், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 75ரூ.

ஜாதகரீதியாக திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி என்பதை இந்த நூலில் விளக்கியுள்ளார் டாக்டர் கே.என். சரஸ்வதி. புத்தகம் எளிய நடையில் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது. நன்றி : தினத்தந்தி, 28/8/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *