அக்னிச் சிறகுகள்
அக்னிச் சிறகுகள், அப்துல் கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 130ரூ.
To buy this Tamil online: http://www.nhm.in/shop/1000000002369.html இளைய சமூகத்துக்கு கலாம் விட்டு சென்றது என்ன? முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் நூலை, அவர் மறைவுக்குப் பின் மீண்டும் படித்தேன். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலின் முன்னுரையில், தமிழக மக்களுக்கு என் பிரார்த்தனை என தலைப்பிட்டு அவர் கைப்பட எழுதியுள்ளார். இறைவன் படைப்பில் அனைவரும் சமம். ஒவ்வொரு படைப்பில் அனைவரும் சமம். ஒவ்வொரு படைப்பையும் ஒரு நோக்கத்துக்காகவே இறைவன் படைக்கிறான். இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அதை நிறைவேற்றும் நோக்கோடு நாம் செயல்பட வேண்டும். தேசியம் தொடர்பான எண்ணம் தலைவர்களுக்கு வேண்டும் என, கலாம் குறிப்பிட்டுள்ளார். அவரிடம் சமூக நல்லிணக்கம் ஓங்கி இருந்தது. பள்ளிக்குச் செல்லும்போது, குல்லா அணிந்து செல்பவராக இருந்தார். பள்ளியில் அவருடன் பூணூல் அணிந்து குடுமி வைத்திருந்த, ராமநாத சாஸ்திரிகளும் அமர்ந்திருந்தார். முதல் வரிசையில், குல்லா அணிந்தவரும், பூணூல் அணிந்தவரும் பக்கத்தில் அமர்ந்திருப்பதை, வகுப்பு ஆசிரியர் விரும்பவில்லை. கலாமை, கடைசியில் சென்று அமரும்படி பணித்தார். இதை ஏற்றுக்கொள்ளாத ராமநாத சாஸ்திரிகள் அதுகுறித்து தன் தந்தையிடம் சொல்கிறார். அவரும், இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என ஆசிரியரைக் கண்டிக்கிறார். இந்த சம்பவத்தை அக்னி சிறகுகளில் பதிவு செய்துள்ள கலாம், ஆசிரியரை குறைசொல்லவோ, பழித்துப் பேசவோ இல்லை. அன்றைய காலகட்டத்தில் அதுபோன்றதொரு அணுகுமுறை சமூகத்தில் இருந்திருக்கும். அந்த ஆசிரியரையும் பற்றியிருக்கலாம் என கூறுகிறார். கலாமின் இந்த சமூக நல்லிணக்க அணுகுமுறை போற்றத்தக்கது. எந்த ஒரு விஷயத்தையும், எதிர்மறையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் நேர்மறையாக அணுகியுள்ளார். வாழ்வில் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள், இழப்புகள் அனைத்தையும் நேர்மறையாகவே பார்த்துள்ளார். இந்த அணுகுமுறை, இன்றைய சமூக சூழலில் மிக அவசியமான ஒன்று. கலாம், பல சாதனைகளை இந்த சமூகத்துக்காகப் படைத்திருந்தாலும் இளைய தலைமுறைக்கு விட்டுச் சென்றுள்ள மிகப் பெரிய சொத்து, நேர்மறையான அணுகுமுறையே. பேராசிரியர் ஹாஜா கனி, சமூக ஆர்வலர், நன்றி: தினமலர், 2/6/2015.