அசடன்
அசடன், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்-எம்.ஏ.சுசீலா, பாரதி புக் ஹவுஸ், பக். 672, விலை 650ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-6.html
இந்த நாவல் பியோதர் தஸ்தயேவ்ஸ்கியால் 1869ல் எழுதப்பட்ட, த இடியட் என்ற நாவலின் மொழிபெயர்ப்பு. திருமதி. எம்.ஏ.சுசீலாவால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவல் பல சிறப்புடையது. அதாவது முழுமுற்றான தீமை என்பது, இல்லவே இல்லை என தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய நாவல் அனைத்திலும் சொல்லி வந்தாலும், முழுமுற்றான நன்மையை, இந்த கதையின் நாயகனான மிஷ்கின் மூலம் படைக்க முற்பட்டார். அதில் வெற்றியும் கண்டார். இன்றுவரை, லட்சியவாத கதாபாத்திரங்களில் பிரதிநியாக மிஷ்கினையே சுட்டுவர் இலக்கியவாதிகள். கரமாசாவ் சகோதரர்களில் வரும் அல்யேஷாவை விட, இவன் நல்லவன் அதனால்தான், நல்லவனுக்கு இந்த உலகம் வைத்திருக்கும் பெயரையே நாவலுக்கு தலைப்பாக்கினார் தஸ்தயேவ்ஸ்கி. தஸ்தயேவ்ஸ்கியை போன்றவர்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சிரமம் அதிகம். திருமதி சுசீலாவின் மொழிபெயர்ப்பு மிக லகுவாக, கதையோடு நாம் பயணிக்கும் விதமாய் உள்ளது. இலக்கிய ஆர்வம் உள்ள எவரும், தவறவிடக் கூடாத நூல் இந்த அசடன். -சித்தார்த்.
—-
மண்ணில் தெரியுது வானம், பாலகுமாரன், திருமகள் நிலையம், பக். 288, விலை 155ரூ.
பாலகுமாரனுக்கு எழுத்து ஒரு வரப்பிரசாதம் மாதிரி. எழுத உத்தேசிக்கும் விஷயத்தைத் தேர்வு செய்த பின், தமிழ்நடை அவருடன் இயல்பாக கைகோர்த்துக் கொண்டு வருகிறது. இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில், வானத்திற்கும் பூமிக்கும் இடையே மனிதனுக்கும் தெய்வத்திற்கும் இடையே உள்ள விஷயங்கள், விவகாரங்கள், வித்யாசமான சிந்தனைகள் என, அனைத்தும் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. விளக்கங்களும் ஏற்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளன. (இதில் அவருடைய தாடியும் அடக்கம்) நல்ல கட்டுரைகள் மொத்தத்தில் சிறந்த புத்தகம். -ஜனகன். நன்றி: தினமலர் 2/6/13.