அஞ்ஞாடி
அஞ்ஞாடி, பூமணி, பக்கங்கள் 1066, வெளியீடு: க்ரியா, பி-37, கிரவுண்ட் ஃப்ளோர், 5வது குறுக்குத் தெரு, யுனிவர்சிட்டி காலனி, பாலவாக்கம், சென்னை – 41. விலை ரூ. 925 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-208-0.html
தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் வரிசையில், கம்பீரமான ஓர் ஆசனத்தைப் பூமணிக்குத் தந்து இருக்கிறது ‘அஞ்ஞாடி’. ஆண்டி, மாரி என்ற இருவர் இடையே முகிழும் நட்பு தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கதை… அதனூடே கடக்கும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்… இவைதான் ‘அஞ்ஞாடி’. மனிதனின் அற்ப உணர்வான சாதி வெறியையும் அற்புத உணர்வான நட்பையும் ஒரே கோட்டுக்குள் கொண்டுவந்து இருக்கிறார் பூமணி. தலித் மக்கள் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருப்பது நமக்குத் தெரியும். ஆனால், நாடார் போன்ற ஏனைய சமூகங்களும் மனிதாபிமானம் அற்ற முறையில் ஒடுக்கப்பட்டு இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆண்களைப் போலவே பெண்களும் மேலாடை அணியத் தடை விதித்த சமஸ்தானம் நம் முன்னோரை ஆண்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ‘சிவகாசி கொள்ளை’ என்று குறிப்பிடப்படும் நாடார்களுக்கு எதிரான கலவரம் இந்த நாவலின் மையம். ஆனால், பூமணி அதோடு நிற்கவில்லை. சம்பந்தர் கால சமணர்கள் கழுவேற்றத்தில் தொடங்கி கட்டபொம்மன் காலத்து விடுதலைப் போர், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை என்று இந்திரா படுகொலையின் நீட்சியான சீக்கியர் கலவரம் வரை வரலாற்றில் பயணம் செய்திருக்கிறார். வரலாறு நெடுக இறைந்துகிடக்கும் மனிதர்களின் சாதி வெறி, மத வெறியைப் படம் பிடித்திருக்கிறார். வரலாற்றைப் பூமணி கையாண்டு இருக்கும் விதத்துக்காக இந்த நாவலைப் பலரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதைவிடவும் இந்த நாவலில் முக்கியமாகத் தெரிவது நாம் தொலைத்த வாழ்க்கையைப் பற்றிய பதிவுகள். 20-ம் நூற்றாண்டின் துவக்கம் வரை நம் முன்னோர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள், இயற்கையோடு எவ்வளவு தூரம் ஒன்றி வாழ்ந்தார்கள். என்பதை ‘அஞ்ஞாடி’ அழகாகவும் விரிவாகவும் படைக்கிறது. கிளித்தட்டு, குடட்டி என விளையாடும் சிறுவர்கள்; முண்டு காளான், குடைக்காளான் என்று விதவிதமான காளான்களைத் தேடிச் செல்லும் சிறுமிகள்; தீவட்டிக் கொள்ளையர்கள், கோழித் திருடர்கள், ஆட்டுத் திருடர்கள்; சாமக் கோடாங்கிகள்; வண்ணாந்துறையில் கேட்கும் வெளுப்புப் பாட்டு; காடை கவுதாரி வேட்டை… இப்படிப்பட்ட வாழ்க்கையை நாம் இனிமேல் வாழவோ, பார்க்கவோ முடியாது. வட்டார வழக்கு, சம்பந்தர் காலத்து உயர் தமிழ் வழக்கு, நெல்லை மாவட்ட கிறித்துவ வழக்கு என்று தமிழின் பல்வேறு பரிமாணங்களிலும் பூமணி புகுந்து வந்திருக்கிறார். நல்ல நாவலாகவும் சரித்திர ஆவணமாகவும் நம் பழங்கால வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்வதற்கான தகவல் களஞ்சியமாகவும் ‘அஞ்ஞாடி’ உருப்பெற்று இருக்கிறது. ‘அஞ்ஞாடி…’ என்றால், வட்டார வழக்கில் ‘அம்மாடி’ என்று அர்த்தம். நாவலைப் படித்து முடிக்கும்போது வியப்பில் இந்த வார்த்தையை ஒரு வாசகர் உச்சரிப்பது தவிர்க்க முடியாதது. நன்றி: ஆனந்த விகடன் 02-01-13