அடைபட்ட கதவுகளின் முன்னால்

அடைபட்ட கதவுகளின் முன்னால், மலையாளத்தில்-அனுசிரீ, தமிழில்-யூமா. வாசுகி, திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை, விலை 60ரூ.

மகனுக்குத் தாலாட்டுப் பாடிய ஒரு தாயின் போர்ப் பாட்டு இது. எல்லாத் தாயும் தன் பிள்ளைகளை சில ஆண்டுகாலம்தான் சுமப்பார்கள். 24 ஆண்டுகளாகச் சிறையில் சுமக்கும் தாய் அற்புதம் அம்மாள். சிறையின் கொடும் தனிமையிலும் எனக்குப் போராடுவதற்கான சக்தி என் அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. வெயில் மழையைப் பொருட்படுத்தாது எனக்காக நீதிமன்றத்திலும் சிறையிலும் ஏறி தளரும் போதெல்லாம் ஒருக்கால் தூக்கு மரத்தின் கீழே நிற்க வேண்டி வரும்போதும்கூட அம்மாவின் முகம் எனக்கு வலிமை தரும். நான் தூக்கில் ஏற்றப்பட்டால் தோற்றுப்போவது என் அம்மாவாகத்தான் இருப்பார்கள். அதுமட்டும்தான் என் துயரம்-அற்புதம் அம்மாளின் கம்பீரம் பேரறிவாளனின் இந்த வரிகளில்தான் இருக்கிறது. எங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியாதது மனித வெடிகுண்டைச் செய்தது யார் என்பதுதான் என்று சொல்கிறார் ஒரு சி.பி.ஐ. அதிகாரி. பேரறிவாளன் வாக்குமூலத்தை நான்தான் மாற்றினேன். அவர் சொன்னதை எழுதாமல்விட்டது எனது தவறுதான் என்று சொல்கிறார் இன்னொரு சி.பி.ஐ. அதிகாரி. ராஜீவ் கொலையில் சுமார் 40 லட்சம் ரூபாய் புழங்கியிருக்கிறது. இதனை இந்தியாவில் கையாண்டது யார் என்பதை நாங்கள் விசாரிக்கவில்லை என்கிறார் ஓய்வுக்குப் பிறகு ஒரு நீதிபதி. இப்படிப்பட்ட அடுக்கடுக்கான பலவீனத்தின் உச்சமான ஒரு வழக்கில், அடைபட்டுக் கிடக்கிறார் பேரறிவாளன். அவரது அம்மா, தன் மகள் 1991 ஜுன் மாதம் 10ம் தேதி பிடிபட்டுப் போனது முதல் இன்று வரையிலான கொடுங்கனவான நீதிப் போராட்டத்தை விவரிக்கும் புத்தகமே இது. பத்திரிக்கையாளர் அனுசிரீ, அற்புதம் அம்மாளிடமும் தொடர்ச்சியாக பேசி மலையாளத்தில்  எழுதிய கட்டுரைகளை, யூமா. வாசுகி தனது கதாபூர்வமான மொழி நடையில் மொழி பெயர்த்துள்ளார். மகனை சி.பி.ஐ. கைது செய்த நாளில் இருந்து, குடும்பம் என்ற பாதுகாபப்ன மேலோட்டில் இருந்து வெளியேறி (இது அற்புதம் அம்மாளின் வார்த்தைகள்) தனி மனுஷியாய் மகனை மீட்க கிளம்பினார் அற்புதம். தனது ஒரு மகனுக்காக மட்டுமல்ல. மரண தண்டனை பெற்ற எல்லாருக்குமான பாசம் கலந்த வீரக்குரல் இது. என் மகன் தெரியாமல் தவறு செய்துவிட்டான். அவனை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று இந்தத் தாய் கேட்கவில்லை. என் மகன் நிரபராதி. அவனை விடுதலை செய்யுங்கள். நான் வேண்டி நிற்பது இரக்கத்தை அல்ல, நீதியை என்று கேட்கிறார் அற்புதம். நான் இப்போதும் நீதியின் மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார் அறிவு. அறிவுக்கு விடுதலை கொடுக்கும் அற்புதத்தை என்று காட்டும் நீதி. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 4/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *