அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ்., விகடன் பிரசுரம், பக். 150, விலை 90ரூ.

வரலாற்றில் பல முக்கிய சம்பவங்களின் ரகசியங்கள் இன்னும் உடைக்கப்படவில்லை. பல கேள்விகளுக்கு, விடை கிடைக்கவில்லை. அவற்றில் 37 மர்மமுடிச்சுக்கள், இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நிலவில், ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்தாரா. நெப்போலியன் எப்படி இறந்தார். ஹிட்லரின் டைரி இருக்கிறதா, எவரெஸ்ட்டை முதலில் அடைந்தவர் யார், அழியா காவியங்களை எழுதியவர் ஷேக்ஸ்பியர் தானா, ராபின் ஹுட் கற்பனை கதாபாத்திரமா என, இதுவரை நாம் ஏற்றுக்கொண்டிருந்த கருத்துகளை, இந்த புத்தகத்தின் மூலம் சந்தேகிக்க வைக்கிறார்ஆசிரியர். உலகின் மிக நீண்ட கல்லறை, சீன பெருஞ்சுவர். 8 கி.மீ. தூரமுள்ள பனாமா கால்வாயில், தினமும் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை 15 ஆயிரம். அங்கோர் பகுதியில் வாழ்ந்த கெமர் இனத்தினர் ஒட்டுமொத்தமாக காணாமல் போனார்கள். பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் முந்தைய வம்சத்தினர் கருப்பர்கள் என்பது உள்ளிட்ட ஆச்சரிய தகவல்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. சுவாரஸ்யம் உள்ள வரலாற்று புத்தகம். -கலா தம்பி. நன்றி: தினமலர்,6/10/2014.  

—-

ஆன்மீக அமுதம், மேவானி கோபாலன், விஜயா பதிப்பகம், விலை 150ரூ.

இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும், அபூர்வத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. ராமநாதபுரம், திருப்புல்லாணி அருகில், தாதனேந்தல் கிராமத்தில் உள்ள புல்லாணி அம்மனுக்கு, உலக்கை சத்தமும், தயிர் கடையும் சத்தமும் கேட்கக்கூடாதாம். ராமேஸ்வரத்தில், அத்தி மரத்தால் ஆன ஆஞ்சநேயர் சிலை உள்ளதாம். ஆனைமலை மாசாணி அம்மன் சிலைக்கும், சங்க கால நன்னன், ஒரு மாங்கனிக்காக, ஒரு பெண்ணைக் கொன்ற கதைக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது ஒரு செய்தி. கும்பகோணத்தில் ஒவ்வொரு ராசிக்குமான தனித்தனி ஆலயங்கள் உள்ளனவாம். தாளவாடி அருகே உள்ள கொங்கலி சிவன் கோவிலில், பெண்கள் நுழையக் கூடாதாம். அதற்கு ஒரு புராண கதை கூறப்படுகிறது. ஆனால் வாசலில் நின்று வணங்கும் கர்ப்பிணிப் பெண்கள் நலம் பெறுகின்றனராம். நாமக்கல் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளதாம். பயன்தரும், பக்திமணம் பரப்பும் செய்திகள் நிறைந்த நூல். -பவானி மைந்தன். நன்றி: தினமலர்,6/10/2014.

Leave a Reply

Your email address will not be published.