அந்நிய நிலத்தின் பெண்
அந்நிய நிலத்தின் பெண், மனுஷ்யபுத்திரன், உயிர்மை பதிப்பகம், சென்னை.
சர்ச்சையை ஏற்படுத்தும் அந்நிய நிலத்தின் பெண் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள, அந்நிய நிலத்தின் பெண் என்ற கவிதை நூலைப் படித்தேன். இந்த நூல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். நம் சமூகத்தின் ஆண், பெண் விருப்பங்கள், அவர்களின் உறவுகள் குறித்து, இக்கவிதை நூல் விவரிக்கிறது. அன்றாட வாழ்வீல் நாம் பயன்படுத்திய பயன்படுத்தும் பல சொற்களை கவிதையில் பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர். இந்த சொற்களை பயன்படுத்தக்கூடாத கெட்ட சொற்கள் என, பலர் கூறியதால் பொது தளங்களில் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. மயிறு என்ற சொல் தூய்மையான தமிழ் சொல். இதற்கு சென்சார் போர்டு வரை தடை இருக்கிறது. இந்நூலில் காதல், காமுகன் போன்ற தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. பெண்ணை ஆண்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை காமுகன் கவிதை எதார்த்தமாக விவரிக்கிறது. காதல் என்ற கவிதையில், நீண்ட நாள் பிரிந்திருந்த காதலி மீண்டும் காதலனை சந்திக்கிறாள். அப்போது என்னை போக விடு, இதை கேட்கத்தான் நான் வந்தேன் என்கிறாள். அவர்கள் பிரிந்து இருந்தாலும், அவள் அவனையே நேசித்து வருகிறாள் என்பதை அற்புதமாக சொல்கிறது இக்கவிதை. பெண்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிக்க படும் அவதியை, ஒரு கவிதை சொல்கிறது. பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என்றும் சித்தரிக்கிறது. பொது இடங்களில் எப்படிப்பட்ட பெண் கழிவறை இருக்க வேண்டும் என்ற அவசியத்தை இக்கவிதை சொல்கிறது. பொதுவாக நமது சமூகத்தில் ஆண், பெண்களை தனித்தனியாகப் பிரித்து வைத்து, அவர்கள் சகஜமாக பழகுவதையே ஏற்காமல் உள்ளனர். இந்தத் தடைகளை மீறி, சமூகம் முன் வர வேண்டும் என்பதை நூல் ஆசிரியர் விவரிக்கிறார். நாம் சொல்ல நினைத்து, அதை உருவகப்படுத்தபடாது பாடுபடுகிறோம். ஆனால் மேலைநாட்டு மொழிகளில், அதை மிக எளிதாக சொல்லிவிடுகின்றனர். இதனால் சமூகத்துக்கு என்ன சொல்லவேண்டும் என்பதை சொல்லி விடுவதோடு, மக்கள் புரிந்து கொள்கின்றனர். சமூக மேம்பாடு என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அறிவிலும், பண்பாட்டிலும், நாகரீகத்திலும் மேம்படுவதைக் குறிக்கும். பண்பாடு, நாகரிக்ம் என்பது ஆண் பெண்கள் உறவிலும் உள்ளது. அந்த மேம்பாட்டை இக்கவிதை நூல் எடுத்துச் சொல்கிறது. கருத்தை சொல்ல வார்த்தைகள் மட்டும் போதுமானது அல்ல. தைரியமும் வேண்டும். அந்த வகையில் இக்கவிதை நூல் முக்கியமானது. -பார்த்திபன், நடிகர். நன்றி: தினமலர், 28/12/2014.