அன்புசேர் வாழ்க்கையிலே
அன்புசேர் வாழ்க்கையிலே, அமுதா கணேசன், தமிழன் நிலையம், 5, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600014, பக். 368, விலை 150ரூ.
காதல் என்பது தென்றலா? புயலா? சுனாமியா? என்ற கேள்வி எழ, அதற்கு விடையாக இந்நூலைப் படைத்துள்ளார் ஆசிரியர். இந்நூலில் 3 காதல் ஜோடிகள் இடம்பெறுகின்றனர். காதலர்கள் கடற்கரை, ஹோட்டல், பேருந்துப் பயணம் என ஊர் சுற்றுவதையும், அவர்களின் எல்லை மீறல்களையும் குறிப்பிட்டுள்ள ஆசிரியரின் எழுத்துத்திறன், இப்புத்தகத்தைப் படிப்பவர்களைக் கிளுகிளுப்படையச் செய்யும். பெற்றோரின் அன்புக்கு மாறாக எதையும் செய்ய முடியாமல், 2 காதல் ஜோடிகள் தங்கள் காதலை முறித்துக்கொண்டு பெற்றோர் பார்த்த வரனையே மணப்பது சற்று மன வருத்தத்தைத் தருகிறது. அப்படி திருமணமான இரு ஜோடிகளைத் தனித்தனியாகப் பிரித்து, அவர்களைப் பழைய காதல் ஜோடிகளாக ஒன்று சேர்த்து வைக்கும் இன்ஸ்பெக்டரின் காதல்தொண்டு வித்தியாசமானது. அதிர்ச்சியளிக்கக்கூடியது. தோழியின் பேச்சைக் கேட்டு தடம் மாறிய கல்லூரி மாணவியை, போலீஸ் இன்ஸ்பெக்டரே மணப்பது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. படிப்பதற்குச் சுவாரஸ்யமான நூல்.
—-
செங்கிஸ்கான், லயன் எம்.ஸ்ரீனிவாசன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 216.
இந்நூலே புரட்டிப் பார்த்தாலே படிக்க தூண்டும். படித்து முடித்தவர்கள் பிறருக்குக்கூட தராமல் பாதுகாத்து வைக்கும் முடிவுக்கு வருவார்கள். அன்றாடங்காய்ச்சியாக வறுமையிலும் வாழ்க்கையிலும் சோகத்துடன் இளமைக் காலத்தில் வாழ்ந்த டெமுமூன், உலகத்தில் பெருமளவு நாடுகளை ஆட்சி புரிந்ததைக் காட்சிகளாக விளக்குகிறது இந்நூல். அந்த டெமுமூன்தான், பிற்காலத்தில் செங்கிஸ்கான் என்று அழைக்கப்பட்டவர். இந்நூலில் மங்கோலியர்கள் வாழ்க்கை முறைகளையும் கலாசாரத்தையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார். செங்கிஸ்கானின் ஆளுமைத்திறன், நட்பு, தியாகம், தலைமைப்பண்பு, உற்றத்தோழனே அவருக்கு எதிரானது, கடும்போர், யுத்தம், போர் வழிமுறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டைக் கைப்பற்றும்போது கிடைத்தவற்றை அனைவருக்கும் பிரித்து கொடுத்ததில் செங்கிஸ்கானின் ஈகையையும், தன்னை நம்பியவர்களை அருகில் வைத்துக் கொண்டதில் விசுவாசத்தையும் உலகின் பெரும் பகுதியை ஆண்ட போதிலும் காட்சிக்கு எளியவனாய் இருந்ததையும் பார்க்கும்போது ஏழைப்பங்காளனாய் இருந்ததையும் உணரமுடிகிறது. அரசியல், வரலாறு போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் படித்து, பாதுகாக்க வேண்டிய நூல் இது. நன்றி: தினமணி 19/12/2011