அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்
அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள், மௌலானா முகம்மத் ஃபாரூக் கான், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், பெரம்பூர், விலை 240ரூ.
கவிதை மாதிரி ஓர் அறநூல் “மனிதர்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே. தவறிழைப்பவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் மீள்பவர்தான்.” இதற்கான விளக்கம் தவறிழைத்த பிறகு அதிலேயே உழன்று கிடைக்காமல் கணப்பொழுதுக்குள்ளாக செய்த தவறை உணர்ந்து, வருத்தப்பட்டு, மனம் நொந்து, வேதனையடைந்து, என்ன இப்படி ஆகிவிட்டதே என மனம் பதைத்து அந்தக் கணத்திலேயே இறைவன் பக்கம் திரும்புகிறவர்கள் மனிதர்களில் சிறந்தவர்களாவர் என்பதே. ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்று ஒரு கேள்வியை ஓர் அடியார் நபிகளாரிடம் கேட்டதுண்டு. அதற்கு அண்ணலின் பதில் நறுக்குத் தெறித்தமாதிரி வந்தது. “தூய்மையான, உயர்ந்த சொல்லும் பசித்தவர்களுக்கு உணவளித்தலும்.” ஓர் அழகிய கவிதையை அனுபவிப்பதுபோல் இந்த நிகழ்வை அனுபவிக்கலாம். அனஸ் (ரலி) அறிவித்தது இது. “நாங்கள் அண்ணல் நபிகளாருடன் இருந்தோம். அப்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. அண்ணல் நபிகளார் (ஸல்) வெளியே வந்தார்கள். தம்முடைய மேலாடையைக் கழற்றினார்கள். மழைத்துளிகள் அண்ணல் நபிகளாரின் மீது விழுந்தன. இதனைப் பார்த்து நாங்கள் கேட்டோம். ‘இறைத் தூதரே! நீங்கள் ஏன் இவ்வாறு நடந்துகொண்டீர்கள்?’ அண்ணல் விடையளித்தார்கள். ‘ஏனெனில் இவை புத்தம் புதிதாக நம்முடைய அதிபதியிடமிருந்து நேராக வந்து இறங்கியுள்ளன.’ புதுமழைத்துளிக்குத்தான் எவ்வளவு தெய்வீக கௌரவம் பாருங்கள்! இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு, சமூகவியல், ஒழுக்கவியல் போன்ற ஆறு தொகுதிகளில் நூற்றுக்கணக்கான நபிமொழிகளைக் ‘கலாமே நுபுவ்வத்’ என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறார் மௌலானா முஹப்பத் ஃபாரூக் கான். அவற்றுள் ஒன்றுதான் இப்போது ‘ஒழுக்கவியல் – முதல் தொகுதி’யாக மலர்ந்துள்ளது. -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 29/3/2015.