அமுதம் பருகுவோம்
அமுதம் பருகுவோம், ப. முத்தக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 128, விலை 100ரூ.
இந்து மதத்தின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தும் நூல். தியானம் மனித வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. தனி மனிதனின் உயர்வுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான அறநெறிகளை ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை போன்ற அறநூல்களின் மேற்கோள்களோடு எடுத்துரைக்கும் பயனுள்ள நூல் இது. ஆகம விதிப்படி நிறுவப்படாத சிலைகளினால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்களினால் பொதுவாக நன்மைகள் விளையும். நமது துயரங்களுக்கு கடந்த காலத்தில் செய்த பிழைகளே காரணம் என்று உணரும் கொள்கைகளின் அடிப்படையில் இந்து மதம் உருவாக்கப்பட்டது. மனிதன் பரம்பொருளின் ஒரு சிறிய துணுக்கு என்பதை முதலில் உணர வேண்டும். இந்தப் பொருளியல் உலகில் கட்டுண்டு கிடக்கும் மனிதன் மீண்டும இறைவனை அடைய வேண்டும் என்பதை அவனுடைய வாழ்க்கையின் லட்சியம் என்பதை உணர வேண்டும். எல்லாரிடமும் சக்தி உண்டு. அதைத் தக்க முறையில் வெளிக்கொண்டு வர வேண்டும். தியானம் புரிபவர்கள் எல்லையற்ற அமைதி அடைவதால், குறைந்த நேரத்தில் அதிகமான பணிகளை அவர்களால் செய்ய முடிகிறது. தியானம் இறைவனை அடைய உதவும் என்று சீரிய வாழ்க்கைக்கான சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகிறது இந்நூல். நன்றி: தினமணி, 27/5/13.
—-
கவித்துளி, வாசகன் பதிப்பகம், 11-96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசி குண்டு, சேலம் 636015, விலை 40ரூ.
37 மாற்றுத் திறனாளிகள் எழுதிய குறுங்கவிதைகள் கொண்ட தொகுப்பு நூல். கவிதைகளைப் படித்தால், இவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது புரியும். கருத்தாழம் மிக்க கவிதைகளை எழுதிய இவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
—-
அன்றாடம் ஓதும் அழகிய துஆக்கள், பேராசிரியர் மவுலவி எம். அப்துல் ரஹ்மான் பாஜில் பாக்கவி, ஜுபைர் பப்ளிஷர்ஸ், 22/1ஏ, தீட்டித் தோட்டம் 5 வது தெரு, பெரம்பூர், சென்னை 11, விலை 130ரூ.
பிரார்த்தனை (துஆ) இறை வணக்கத்தின் அடிப்படையாகும். இதன் மூலம் மனிதன் இறைவனிடம் தனது கோரிக்கையைச் சமர்ப்பிக்கிறான். இதன் அடிப்படையில் அன்றாடம் ஓதும் அழகிய துஆக்களை பேராசிரியர் மவுலவி எம். அப்துல் ரஹ்மான் பாஜில் பாக்கவி தொகுத்து வழங்கியுள்ளார். புத்தகத்தின் தொடக்கத்தில் துஆவின் சிறப்பு, அதன் அவசியம் குறித்து கூறப்பட்டுள்ளது. காலையில் எழுந்தது முதல் இரவில் தூங்கச் செல்லும் வரை ஒவ்வொரு நேரத்திலும் ஓதும் துஆக்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு முஸ்லிம்களின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி 22/2/2012.