அம்மாக்கள் வாழ்ந்த தெரு
அம்மாக்கள் வாழந்த தெரு, ஆசு, இருவாட்சி, சென்னை 11, பக். 120, விலை 70ரூ.
கிராமத்தின் வாழ்க்கையை மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு. அதிலும் குறிப்பாக கிராமத்துப் பெண்களின் வேதனைகள், துயரங்கள் பல கதைகளில் வெளிப்படுகின்றன. மழையில்லாமல் எங்கெங்கும் தீய்ந்து போன நிலங்கள். கிராமத்து மனிதர்களுக்கு உணவுக்கும் வழியின்றிப் போகிறது. பூமிக்கடியில் உள்ள கிழங்குகள், தானே முளைத்து வளர்ந்திருக்கும் பண்ணை கீரைகள், சோற்றுக்கற்றாழை எனக் கிடைப்பதையெல்லாம் அவர்கள் தேடிக் கண்டுபிடித்து உண்டு, உயிர் வாழ வேண்டிய நிலையை, ஒரு சிறுகதை துயரத்துடன் சொல்கிறது. மார்பகப் புற்றுநோய் காரணமாக குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாத தாய், பசியால் துடிக்கும் அவளுடைய குழந்தைக்குப் பால் கொடுத்து அதற்கு உயிர் கொடுக்கும் வேலைக்காரப் பெண் என மனித உறவுகளின் உன்னதங்களைச் சொல்லும் கதைகளும் உண்டு. இந்த நவீன யுகத்திலும் நமது நாட்டின் கிராமங்களில் மனித வாழ்க்கை இப்படி உணவுக்கும், அடிப்படைத் தேவைகளுக்காகவும் ஏங்கித் தவிக்கிறதே என்று வாசகர்களை யோசிக்க வைக்கும் கதைகளின் தொகுப்பு. நன்றி: தினமணி
—-
கயிறே என் கதை கேள், இரா. சரவணன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-394-4.html
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்தவர்களில் ஒருவரான வெ. ஸ்ரீகரன் என்கிற முருகன் எழுதிய புத்தகம். தானும் தன் மனைவி நளினியும் கைது செய்யப்பட்டதில் இருந்து இப்போது நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறார். போலீசார் விசாரித்த விதத்தை இவர் கூறும் போது, சில சினிமாப் படங்களின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. கைது செய்யப்பட்டபோது என் எடை 60 கிலோ. போலீஸ் விசாரணை முடிநது, சிறையில் அடைக்கப்பட்டபோது எடை 30 கிலோ என்கிறார். 2மாத கர்ப்பிணியாக இருந்து, சிறையிலேயே குழந்தை பெற்ற நளினிக்கு ஏற்பட்ட சோதனைகளையும், தாங்கள் இந்த வழக்கில் சிக்கியது எப்படி என்பதையும் கூறுகிறார். சினிமாக் கதைகளையும் மிஞ்சும் வாழ்க்கை வரலாறு. நன்றி; தினத்தந்தி, 4/4/2012.
