அரபுப்புரட்சி மக்கள் திரள் அரசியல்
அரபுப்புரட்சி மக்கள் திரள் அரசியல், யமுனா ராஜேந்திரன், அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், 621310, திருச்சி மாவட்டம், விலை 210ரூ.
அரபுப் புரட்சிக்கு அடிப்படைக் காரணம், தகவல் தொழில்நுட்பப் புரட்சி. அரை நூற்றாண்டு காலமாக அசைக்க முடியாத மன்னர்களாக இரந்தவர்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இணையதளம், இமெயில் மூலமாக அசைத்துப் பார்த்தது அரபுப் புரட்சி. லிபியாவில் கடாபியும், எகிப்தில் முபாரக்கும், துனீசியாவில் பென் அலியும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகக்காரணமான இளைஞர்களும் இளம் பெண்களும் எப்படித் திரண்டனர், ஏன் திரண்டனர், அவர்களை இயக்கிய சக்தி எது என்பதை அலசி ஆராயும் புத்தகம் இது. துனீசியாவில் சித்திபூசித் நகரத்தில் 26 வயது இளைஞரான முகம்மது பூவாசிசி திடீரென ஒரு நாள் தனது உடலில் தானே தீ வைத்துத் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு ஆரம்பத்தில் காரணம் தெரியவில்லை அதற்குப் பிறகுதான் அடுக்கடுக்கான காரணங்கள் அணிவகுக்க ஆரம்பித்தன. அரசியல் ஜனநாயகமின்மை, வறுமை, காவல்துறை அடக்குமுறை, பெண் ஒடுக்குமுறை ஆகியவற்றால் நிரம்பி வழிந்த ஆட்சிக்கு எதிரான கோபத்தை பூவாசிசி, தனது உடலில் தீ வைத்துத்துக் காட்டினான். தன்னையும் அரபுப் புரட்சியையும் ஒரே சமயத்தில் கொளுத்தினார் பூசிசி என்று அரபுச் சிந்தனையாளரான ஹமித் தபாசி எழுதுகிறார். அந்த தீ லிபியாவிலும் எகிப்திலும் பரவியது. வால் ஸ்ட்ரீட் பாராட்டத்துக்கும் லண்டன் தேவாலயங்களின் முன்னால் திரள்வதற்கும் அடித்தளம் அமைத்தது. 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மன்னர்களை எதிர்த்து 1980க்கும் பிறகு பிறந்த இளைஞர்கள் போர்க்கோலம் பூண்டதைப் பார்த்து ஆட்சியாளர்களுக்கு ஆரம்பத்தில் எந்த பயமும் இல்லை. ஆனால் தலைநகரங்களிலும் சாலைகளிலும் பூங்காக்களிலும் நாளுக்கு நாள் கூட்டம் திரள ஆரம்பித்த பிறகு, கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். துப்பாக்கி அச்சுறுத்தலுக்கு இந்த இளைஞர்கள் பயப்படவில்லை. இந்த இளைஞர்கள் எவரும் ஆயுதப்பயிற்சி எடுத்தவர்கள் கிடையாது. பெரிய அமைப்புகளை நடத்தியவர்கள் இல்லை. வழிநடத்தும் தலைவர்கள் இல்லை. ஆனால் கோபம் மட்டுமே இருந்தது. வறுமை, வேலையின்மை, ஊழல், போலீஸ் ராஜ்யம் போன்றவற்றுக்கு எதிராக ஊதிய உயர்வு, மருத்துவம், அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், கல்வி வாய்ப்பு போன்றவற்றுக்கும் கூட்டம் கூடும் உரிமை, பிரதிநித்துவ ஜனநாயகம், மக்களாட்சி போன்றவற்றுக்குமாகவே இந்த எழுச்சி இருக்கிறது என்பதை யமுனா ராஜேந்திரன் மிகச் சரியாகவே சொல்கிறார். இது அனைத்து நாடுகளுக்குமான அச்சுறுத்தலாகவே இருக்கிறது. இருக்கும் என்பதையும் கணிக்க முடிகிறது. இந்தப் போராட்டங்களை கம்யூனிஸ்ட் நாடுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சரியாக பார்க்கத் தவறியதை கட்டுரையாளர் கடுமையாக விமர்சிக்கிறார். பொதுவாக அரபு நாடுகளை அமெரிக்க ஆதரிக்காது. ஆனால் அரபுப் புரட்சியை அமெரிக்கா ஆதரித்தது. அமெரிக்கா ஆதரித்ததால் இந்தப் போராட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் நழுவும் தன்மையுடன் விமர்சித்தன. இலங்கை தொடங்கி உலகின் பல நாடுகளிலும் நடந்த போராட்டங்களை வெறும் வறட்டு வாதங்களால் உதாசீனம் செய்த கம்யூனிஸ்ட் நிலைப்பாடுகளைத் தனது வாதங்களின் மூலமாக யமுனா ராஜேந்திரன் விளாசுகிறார். உலகின் இன்றைய போக்குகளைப் புரிய வைக்கும் புத்தகமாக இது இருக்கிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 6 பிப்ரவரி 2013.