அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், சென்னை 80, பக். 1864, விலை 1500ரூ. To buy this Tamil book – www.nhm.in/shop/100-00-0001-014-6.html

காவல் தெய்வமான கருப்பசாமியைப் பற்றி புராணங்களில் கூறப்பட்டிருப்பதில் தொடங்கி, அவருடைய வேறு பெயர்கள், பூஜை முறைகள், வணங்க வேண்டிய நாள்கள், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கருப்பசாமி கோயில்கள் பற்றிய தகவல்கள் (அமைவிடம், கோயில் அமைப்பு, வழிபாடு விவரம்) இப்படி கருப்பசாமி குறித்த அனைத்துச் செய்திகளும் அடங்கிய அருமையான தொகுப்பு இது. ஏராளமான படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அழகர் கோயில் 18ஆம் படி மற்றும் மானாமதுரை 18ஆம் படி கருப்பசாமியின் அருட் செயல்கள் தம் நெஞ்சைத் தொடுகின்றன. வேலங்குடி உறங்காப் புளி கருப்பர் கீழச்சீவற்பட்டி ஆச்சியை திருடர்களிடமிருந்து காத்த சம்பவமும் விருத்தாசலம் அருகேயுள்ள கொடாரம் என்னும் ஊரில் சிறை மீட்ட கருப்பசாமி அவ்வூர் மக்களுக்காக நீதிமன்றம் வந்து சாட்சியளித்த சம்பவமும் வியப்பளிக்கக்கூடியவை. கருப்பசாமியைப் பற்றி பாரதியார் முதல் பல்வேறு கவிஞர்கள் பாடிய பாடல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நாட்டரசன் கோட்டை முத்துக்குட்டிப் புலவர்கள் இரட்டையாசிரிய விருத்தமாக இயற்றிய பெரிய கருப்பண சுவாமி பதிகமும் ராங்கியம் கருப்பர் மீது பாடுவார் முத்தப்பர் பாடிய பதிகமும், காவியச் சுவைமிக்கவை. கருப்பசாமி குறித்து அ முதல் ஃ வரை அறிய உதவும் அரிய நூல் இது.  

—-

 

கி. ராஜநாராயணனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும், க. பஞ்சாங்கம், அன்னம், தஞ்சாவூர், பக். 160, விலை 110ரூ.

இயற்கையை எழுதுதல் என்றால் அது மனித பண்பாட்டிற்கு உதவுதல் அல்லது பயன்படுதல் என்றும் கூறலாம். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கும் கி.ரா.வின் எழுத்துக்களை ரசித்து வாசிக்கலாம். மனிதரின் கையில் இருக்கும் எழுதுகோல் அனுபவங்களை வடித்தெடுத்து, அற்புதமாக பயணிக்கிறது. அதை அங்குலம் அங்கலமாக அலசிய நூலாசிரியர் க. பஞ்சாங்கம், கி.ரா.வின் எழுத்துகளின் சிறப்புகளையும், இயற்கையை அவர் கையாண்டிருக்கும் பாங்கையும் விரிவாக அலசியிருக்கிறார். குறிப்பாக கோபல்ல கிராமம் நாவல் வர்ணனைகள் நூல்முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ஓலைக் குழல் ஊதிக்கொண்டே எருமைகள் மேல் சவாரி செய்து வந்தார்கள் சிறுவர்கள் என்பன போன்ற வர்ணனைகளோடு ஆழ்ந்த நுட்பத்துடன் பல உதாரணங்களைக் கூறலாம். நிலம் சார்ந்த கி.ரா.வின் அனுபவம் புஞ்சை நிலத்தை அனுபவமாகக் கொண்டிருக்கிறது. இயற்கையை எழுதுதலுக்கு நண்டுகள், எலிகள், மான், புறாக்கள் பேசுவதுபோல அமைத்திருக்கிறார். இப்படியாக கிட்டத்தட்ட 7 தலைப்புகளில் விரிவான அலசலாக விரும்பி படிக்கும் பகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. இறுதியாக கி.ரா.வுடன் ஒரு நேர்காணலும் உள்ளது. அதில் கிராமத்தை விட்டு இடம் பெயர்தல் குறித்த ஒரு கேள்விக்கு, ஊர் பெயர்ந்து மண் துறந்து வாழ வேண்டியவர்கள் பிரியமானவற்றை இழக்க வேண்டியவை மிக அதிகம்தான் என்று பதிலளித்திருப்பது நினைவில் நிற்கிறது. நன்றி : தினமணி, 6/5/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *