அவ்வையார் நூல்கள்
அவ்வையார் நூல்கள் (ஆங்கில மொழியாக்கத்துடன்), செ. நாராயணசாமி, சுரா பதிப்பகம், பக். 336, விலை 150ரூ.
நூலாசிரியர் கொங்கு நாட்டினர். குறையாத கல்வி நிரம்பியவர். அறிவியல், கணக்கு, தொழில்நுட்பம் ஆய்ந்து தேர்ந்தவர். இந்த நூலில் அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, கல்வியில் ஒழுக்கம், அவ்வைக்குறள், பிள்ளையார் அகவல், தனிப்பாடல் என, கிடைத்தவற்றைத் தொகுத்து, அந்த அடி அல்லது பாடலுக்குப் பொருள் விரிவுரை எழுதியும், மூலத்தை ஆங்கிலத்தில் எழுத்தாக்கம் செய்தும், ஆங்கில விளக்கமும் தந்து நூலை ஆக்கியுள்ளார். அவையார் பலர் வாழ்ந்திருந்தனர். சங்ககால அவ்வை வேறு, நீதிநூல்கள் பாடிய பிற்கால அவ்வை வேறு. பிற்கால அவ்வையார் நூல்கள், இவண் தொகுக்கப்பட்டுள்ளன. அருஞ்சொல் அகராதியும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் நூலில் உள்ளன. அறஞ்சொல் அகராதியும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் நூலில் உள்ளன. அறஞ்செயவிரும்பு என்பதன் பொருளாக, நீ ஈதலை விரும்பு என்று எழுதியுள்ளார். அறம் பலதரப்பட்டது. ஈதல் அறத்துள் ஒன்று. நற்செயல்களை விரும்பு என, எழுதியிருக்கலாம். அஃகம் சுருக்கேல் என்பதற்கு அளவு குறைத்து விற்பனை செய்யாதே என, காலத்திற்குத்தக்க உரை எழுதியுள்ளார். ஓரம் சொல்லேல் என்பதற்கு ஒரு தலைப் பக்கமாகப் பேசாதே என்று பொருள் தந்துள்ளார். எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல். -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 11/10/2015.