அவ்வையார் நூல்கள்
அவ்வையார் நூல்கள், செ. நாராயணசாமி, சுரா பதிப்பகம், சென்னை, பிக். 336, விலை 150ரூ.
சங்க காலம் தொடங்கி இன்று வரையிலான தமிழ்ப் பெண்பால் புலவர்களில் அவ்வைக்கு நிகர் யாரும் இல்லை என்று கூறலாம். ஆனாலும் அவ்வையார் ஒருவர் அல்ல, இப்பெயரில் வெவ்வேறு காலங்களில் நான்கு அவ்வையார்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஒருவர் சங்க காலத்து அவ்வையார். இவர் பாடியுள்ள 59 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளன. இரண்டாவது அவ்வையார் இறைப்பற்றாளர். விநாயகர் அகவல் போன்ற பக்திப் பாடல்களைப் பாடியவர். மூன்றாவது அவ்வையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதிநெறி நூல்களைப் பாடியவர். நான்காவது அவ்வையார் – தனிப்பாடல்களை மிகுதியாகப் பாடியவர். இவர்கள் மனித வாழ்க்கைக்குத் தேவையான நீதி, ஆன்மிகம், வாழ்க்கைக்குத் தேவையான நீதி, ஆன்மிகம், வாழ்க்கை நெறிமுறைகள், அரசியல், சமுதாயம், இலக்கியம் என்று பல்வேறு துறைகள் குறித்தும் எடுத்துரைத்தவர்கள். ஆங்கில வழிக் கல்வி அதிகம் உள்ள இன்றையச் சூழலில், செம்மையான வாழ்க்கைக்குத் தேவையான அவ்வையாரின் அறநெறிகளைச் சிறுவயதிலேயே கற்றுணர்ந்து, அதன்படி வாழ முனைய வேண்டும் என்ற நன்னோக்கத்தில் இந்நூலாசிரியர் அவ்வையார் பாடல்களைத் தொகுத்து, அதற்கான எளிய தமிழ் விளக்க உரையையும் கூறியுள்ளார். அவற்றை ஆங்கில எழுத்தாக்கத்திலும், மொழியாக்கத்திலும் சிறுவர்களும் புரிந்துகொண்டு படிக்கும்படி இந்நூலை அமைத்துள்ளது சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 13/5/2015.