ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15, குமரி எஸ். நீலகண்டன், சாய் சூர்யா, 204/432, டி7, பார்சன் குரு பிரசாத் ரெசிடென்ஷியல் காம்ப்ளெக்ஸ், டி.டி.கே. ரோடு, சென்னை 18, பக். 502, விலை 450ரூ.

இந்த தேசத்திற்கு ஒரு சமர்ப்பணம். நிஜம், புனைகதை இரண்டும் பின்னிப் பிணைந்து நம்பிக்கை ஒளி பாய்ச்சும் புதினம். ஆக1ட் 15 இந்திய சுதந்திர தினத்தில் பிறப்பெடுத்த இரண்டு உன்னத இதயங்களுடைய வாழ்க்கையின் பின்னணியில் உருவான படைப்பு இது. இன்றைய நாளில் மக்களின் மனங்களுடன் பிணைந்திருக்கம் வலைத்தளம் வாயிலாக பல உன்னத செய்திகளையும் அறிய முடிகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இந்த படைப்பு. ஆகஸ்ட் 15ஆம் நாள் 2000ஆம் ஆண்டில் பிறந்த வேகம் நிறைந்த சத்யா என்ற சிறுமி அதேநாளில் 1922ல் பிறந்த திரு. கல்யாணம் என்கிற விவேகம் நிறைந்த 90 வயது இளைஞரை சிந்திக்கத் தூண்டுகிறது. சத்யம் ஒரு சத்யசீலரின் செயலை சிலிர்க்க வைத்து அவரை தன் வாழ்க்கை அனுபவங்களை வலைத்தளத்தில் சொல்லத் தூண்டுகிறது. வேகத்தையும் விவேகத்தையும் இதில் ஒருங்கே இணைத்து சத்யா என்ற கதாபாத்திரன் கதைகள் மூலம் இந்த சமுதாயத்தின் இழிவுகளைச் சுடிக்காட்டுவதோடு, காந்தியின் தனி செயலராக சபர்மதி ஆசிரம எளிமையிலும் காந்தியின் கடைசி காலம் வரை உடனிருந்த திரு. கல்யாணம் அவர்களின் மலரும் நினைவுகளை மாணிக்கங்களாய் வெளிப்படுத்தி காந்தியின் வாழ்க்கை முறைகளை அறிய உதவியாக இருப்பதுடன் உயிர்த்துடிப்புடன் இயங்கி பல உண்மைச் செய்திகளையும் உரைக்கிறது இந்த புதினம். படிப்போரை ஈர்க்கும் எளிய நடை, சுவாரஸ்ய சம்பவங்கள் மற்றம் நெஞ்சை நெருடும் நிகழ்வுகள் என யாரும் கையாளாத புதிய உத்திகளுடன் புதினத்தைப் படைத்து நம்மையும் அவர் வரிகளின் இனிமையில் மூழ்கடிக்கிறார் நூலாசிரியர் குமரி எஸ். நீலகண்டன். பக்க அமைவுகள் காரணமாக இந்தப் பதிப்பு 500 பக்கங்களாக விரிந்தாலும் கதைகளை அவர் கையாண்ட விதம் நம் ஆர்வத்தை சிறிதும் கலைத்துவிடாமல் காக்கிறது. இவ்வாறு ஆவணக் கலவையாக, அருமையான கதைகளாக அணிவகுத்திருக்கும் ஆசிரியர் குமரி எஸ். நீலகண்டன், இந்தப் புதினத்தில் கையாண்டிருக்கும் புதிய உத்தியின் மூலம் நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுமையின் பிறப்பிடமாக தன்னை வெளிப்படுத்துகிறார். இந்த புதினத்தினை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யவேண்டும். வித்தியாசமான வடிவம், இணையதள பக்கங்களும் அவற்றின் பின்னோடடம் என வடிவமைக்க இந்த புதினம் பல உரத்த சிந்தனைகளைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல் காந்தி மறைந்த 65 ஆண்டுகளுக்குப் பிறகு பல உண்மைகளை இங்கே உரைக்கிறது. குறிப்பாக, சுதந்திரத்தையே சுதந்திரமாக கொண்டாட முடியாத இந்த காலகட்டத்தில், சுதந்திரம் என்றார் ஓர் அருமையான விடுமுறை நாள் என்று சித்தரித்துவிட்ட சில ஊடகங்கள் மத்தியில், சுதந்திரம் மூவர்ணக் கொடியின் முன் வரிசையில் நின்று சல்யூட் அடித்துவிட்டு, இனிப்பு மிட்டாய்களை சுவைத்துவிட்டு, பின் பல புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கண்டு மகிழலாம் என்று மட்டுமே தன் எண்ணங்களில் பதித்துவிட்ட பலதரப்பட்ட மக்களின் பார்வையிலேயே அவர்களின் எண்ண ஓட்டங்களை சீரமைக்கும் நோக்கிலே சுதந்திரத்தின் புதினத்தையும், அதற்காக பாடுபட்ட மகாத்மாவின் தியாகத்தையும் பிரதிபலிக்க இந்த புதினச் சுவடுகள் சிறிதும் தவறவில்லை. திரு. கல்யாணம் என்ற விவேகம் நிறைந்த 90 வயது இளைஞரின் மனக்கதவில் மறைந்திருந்த நிகழ்வுகளை கட்டவிழ்த்து அதனை ஆவணப்படுத்தும் பணியை செவ்வனே செய்திருக்கிறது குமரி எஸ். நீலகண்டனின் இந்த ஆகஸ்ட் 15. இந்த புதினப் படைப்பினை நாம் வாங்குவததோடு மட்டுமல்லாமல் இதனை பொக்கிஷமாய் பாதுகாப்பதும் நமது கடமை. -ராஜேஷ். நன்றி: இந்தியா டுடே, 11/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *