ஆக்கமும் பெண்ணாலே
ஆக்கமும் பெண்ணாலே (பெண் படைப்பாக்க ஆளுமைகளின் உரையாடல்), ஏ. இராஜலட்சுமி, முரண்களரி படைப்பகம், 34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர், சின்னசேக்காடு, மணலி, சென்னை 58, பக்.144, விலை 100ரூ.
காலம் காலமாக சமூகத் தளைகளால் கட்டுண்ட பெண்கள், இலக்கிய மரபுகளை மீறி தம் உணர்வுகளைச் சுதந்திரமாகப் படைப்பிலக்கியத்தில் வெளியிட்டுள்ளனர். அதற்கு பெண் புலவர்களின் பாடல்களே சான்றாகத் திகழ்வதை சான்றுகளோடு எடுத்தக் காட்டியுள்ளார் ஆய்வாளர். புறப்பாடல்களைவிட அகப்பாடல்களை அதிகம் பாடியுள்ள பெண் புலவர்கள் ஆண்களை மையப்படுத்தியே பாடியுள்ளனர் என்றும், பெண் புலவர்கள் பாடிய புறப்பாடல்கள் எட்டுத்தொகை நூலில் காணப்பட்டபோதிலும் அவை ஆண்களுடைய வீரத்தையும், கொடையையும் பாராட்டுவதாகவே உள்ளன என்றும், மொத்தத்தில் இப்பாடல்களில் பெண்களின் தனித்தன்மையையோ, அறிவாற்றலையோ முன்னிலைப்படுத்தாமல் இருப்பதையும் காண முடிகிறது என்றும் பதிவு செய்துள்ளார். காரைக்கால் அம்மையார், சமுகக் கருத்தாக்கங்களைப் படைப்பு வெளியில் முன்வைத்து படமாகப் பல பாடல்களை இயற்றியுள்ளதையும் சமூகத்தில் பெண் தனித்து வாழ்வதற்குத் தகுதியற்றவளாகக் கருதப்பட்டதால், காரைக்கால் அம்மையார் தனியாக இவ்வுலகில் வாழும் சூழலில், அவரின் படைப்பாற்றலும், ஆழ்ந்த ஆன்மிக உணர்வும் கேலிக்குரியதாகவும், பழிப்பிற்குரியதாகவுமே சமூகத்தால் பார்க்கப்பட்டன. அதற்கு அற்புதத் திருவந்தாதியே சான்று என்பதை காரைக்காலம்மையார் பாடல்களில் படைப்பு வெளி என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார். இதிலுள்ள 19 கட்டுரைகளும் பெண்ணை மையப்படுத்தியே செல்கின்றன. பெண் படைப்புகளை மீட்டெடுப்புச் செய்வதன் மூலமாக மட்டுமே பெண்படைப்புகளையும், பெண்ணியத் தளத்தையும் கண்டறிய இயலும் என்று கூறும் ஆய்வாளர், இறுதியில் தந்திருக்கும் சற்றே சிந்திக்க பகுதி உண்மையாகவே சிந்திக்க வைக்கிறது. சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பெண் தன் அடையாளத்தை முன்வைக்கப் போராடிக் கொண்டிருப்பதையும் அப்போராட்டத்திற்காகப் பெண் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் படைப்பு என்பதையும் கூறியுள்ளார். சிந்தனையைத் தூண்டும் நூல். நன்றி: தினமணி, 15/9/2013
—-
நீலம்பிக்கை அம்மையாரின் படைப்புகளில் சமூகச் சிந்தனைகள், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-6.html
தனித்தமிழ் இயக்கத் தலைவர் மறைமலையடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் தமிழில் இருந்து வடமொழிச் சொற்களை நீக்கவேண்டும் என்ற எண்ணம் மறைமலையடிகளாருக்குத் தோன்ற காரணமாக இருந்தவர். மொழி, பெண்மை, சமயம் பற்றிய அவருடைய கருத்துக்களை ஆராய்ந்து இந்த நூலை அருமையாக எழுதியுள்ளார் முனைவர் சாரதா நம்பி ஆரூரன். தொடக்கத்தில் வரும் நீலாம்பிகை அம்மையாரின் வாழ்க்கை வரலாறு நெஞ்சைத் தொடுகிறது. அவருடைய காதல் திருமணம், திருமணம் ஆகி 15 ஆண்டுகளில் 11 குழந்தைகளுக்குத் தாயானது. கணவர் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு, கணவர் இறந்த அடுத்த ஆண்டிலேயே இவரும் காலமானது… இவை போன்ற தகவல்கள் மனதை நெகிழச் செய்கின்றன. நன்றி: தினதந்தி, 11/9/2013