ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை (செவ்வியல் அரசியல் பொருளாதாரம்)
காற்றால் நடந்தேன், சீனு ராமசாமி, உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 18, பக்கம் 104, விலை 80 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-203-0.html
சீனு ராமசாமியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சமூகம் கட்டமைத்த சராசரி ஆண் மனதைக் கடக்க எண்ணும் முயற்சி பல கவிதைகளில் பிரதிபலிக்கிறது. ஒரு கூரையின் கீழ் காதலின்றி வாழ நேரும் ஓர் ஆணையும் பெண்ணையும் காதலற்ற வாழ்வில் நடமாடித் திரிவதைவிடவும் இப்பிரிவு உன்னதம் என்கிறது ‘விளக்கம்’ கவிதை. யானை குறித்த ஒரு கவிதையில் ‘காட்டை நினைவுறுத்திய காற்றில் கிளர்ந்த கோபத்தை ‘மதம்’ என்றான் நெற்றிக்கு நேரே கோடு வளர்த்த வைணவன்’ என்கிற வரிகளில் சூடு. கவிஞர் உச்சம் தொடுவது மனைவிக்கும், மகளுக்கும், அம்மாவுக்கும் எழுதிய கவிதைகளில். மனசாட்சியுடன் சுயவிமர்சனம் செய்யும் கணவனாக ‘பின்தொடர்ந்து/பின்தொடர்ந்து/பின்தொடர்ந்து/என்னைக் கடக்காமலேயே நிற்கிறாள்/ குற்றமற்றவன்போலவே/நடப்பது என் சுபாவம்’ என்று மனைவிக்கு எழுதிய கவிதை மனக்கண்ணில் உருவாக்கும் காட்சியும், கவிதையின் பொருளும் பரிசுத்தமானவை. ‘நாள் என்பது நாள் அல்ல. பின்பொரு சமயம் ஏங்கித் தவிக்கும் நினைவு’ என்ற நாளின் விளக்கம்… இதமான ரசனை. பெருநகரத்துக்கே உரித்தான சித்திரங்களை மனதில் தோற்றுவிக்கும் கவிதைகளின் ஒரு சோறு பதம்… ‘வாடகை தராத நாளொன்றிலிருந்து எனக்கும் அவருக்குமான உரையாடல் தரைதட்டி நின்றது’ எனும் ‘மௌனதர்க்கம்’ கவிதை. சற்றே பிசகினாலும் உரைநடை ஆகிவிடக்கூடிய கவிதைகளை உணர்வு பொங்கும் சொற்களாலும், செழுமையான வரிகளாலும், சமூக அக்கறையாலும் அழகான கவிதையாக்கிவிடும் திறமை வாய்த்திருக்கிறது சீனு ராமசாமியிடம். நன்றி: ஆனந்த விகடன் 31/10/12
—
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை (செவ்வியல் அரசியல் பொருளாதாரம்), எஸ். நீலகண்டன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை – 20, மற்றும் காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், பக்கம் 432, விலை 250 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-505-3.html
முதலாளியத்தின் அபரிமிதமான உற்பத்தித்திறன், அதன் விளைவாக எழுந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் வீணடிப்புகளையும் நீங்கள் உலகின் எந்தப் பெருநகரங்களின் நடுவில் நின்று பார்த்தாலும் காணமுடியும். முதலாளியத்திற்கு மாற்றாக கூட்டுறவு, சோசலிச – கம்யூனிசக் கொள்கைகளைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இந்த இரு சாரார்க்குமே முதலாளியத்தின் தோற்றம், அதன் நிறை குறை, அதன் தன்மையை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தைத்தான் நூலாசிரியர் எஸ். நீலகண்டன் இந்நூலில் பூர்த்தி செய்ய முனைந்திருக்கிறார். நன்றி: குமுதம் 31/10/12
—
டீன் ஏஜ் பிரச்னைகளும் தீர்வுகளும், டாக்டர் பொ. முருகன், குமுதம் புத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10, பக்கம் 192, விலை 120 ரூ.
டீன்ஏஜ் வயதினர் தங்களைத் தாங்களே புரிந்துகொள்ளவும், பெற்றோர் அவர்களைப் புரிந்துகொள்ளவும் உதவும் வழிகாட்டி நூல் இது. டீன் ஏஜ் வயதில் அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், சிந்தனைகள், அவர்களின் உணவுப் பழக்க வழக்கம், அவர்களின் சைக்காலஜி, இந்த வயதில் ஏற்படும் காதல், மோகம், உடலுறவு என்று ஒன்றுவிடாமல் நூலில் அலசப்பட்டுள்ளது. இந்நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்டுரைகளும் குமுதம் ஹெல்த் இதழில் தொடராக வந்தவை. குமுதம் புத்தகம் அக்கட்டுரைகளைத் தொகுத்து இப்போது நூலாக வெளியிட்டுள்ளது. நன்றி: குமுதம் 31/10/12