ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்)
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்), பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், சென்னை 33, முதல்பாகம் (பக்கம்-256, விலை-140ரூ), இரண்டாம் பாகம் (பக். 224, விலை 125ரூ), மூன்றாம் பாகம் (பக். 272, விலை 160ரூ).
தினமணி கதிரில் வெளிவந்த ஆயுர்வேதம் தொடர்பான வாசகர்களின் கேள்வி பதில்கள் மூன்று பாகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தினமணி கதிரில் வெளியானபோது அதைப் படிக்கத் தவறியவர்கள், படித்தும் பாதுகாக்க முடியாதவர்கள் போன்றவர்களுக்காக அனைத்து கேள்வி பதில்களும் முழுமையாக இம்மூன்று பாகங்களில் இடம்பெற்றுள்ளன. திக்குவாய், அலர்ஜி, மாதவிடாய், ஒற்றைத் தலைவலி, ஆண்களின் குறைபாடு, முக அழகு, கண் கருவளையம், ஆஸ்துமா, எலும்புகள் வலுவடைய, தொந்தி குறைய, மது, சிகரெட் பழக்கம் ஒழிய, முகப்பரு நீங்க, முடி உதிராமல் இருக்க, மன அழுத்தம், தைராய்டு, முதுகுவலி, மலச்சிக்கல், தோல் நோய், டெங்கு காய்ச்சல், பற்கள் பராமரிப்பு, எலும்பு முறிவு, பித்தம் தெளிய, இளநரை, பக்கவாதம், யானைக்கால், ஆவி சிகிச்சை என மூன்று பாகங்களில் 280க்கும் மேற்பட்ட நோய்களுக்கானத் தீர்வை ஒரு மருத்துவக் களஞ்சியமாக்கித் தந்திருக்கிறார் ஆயுர்வேதக் கல்லூரிப் பேராசிரியரான நூலாசிரியர். ஒவ்வொரு இல்லங்களிலும் இருக்க வேண்டிய படித்து உடல் நலம் காக்க வேண்டிய தொகுப்பு. நன்றி; தினமணி, 24/10/11.
—-
பொது அறிவு, பொதுத்தமிழ், பேராசிரியர் நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை 17, விலை 200ரூ, விலை 90ரூ.
இன்றைய இளைஞர்களின் கனவு, அரசு வேலை, நிரந்தர ஊதியம், நிம்மதியான வாழ்வு இவைதான். அதனால்தான் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடும்போட்டிகளுக்கு இடையில் வெற்றி பெற்று வேலையைப் பெறுவதும் சவாலாக இருக்கிறது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள். கையடக்க களஞ்சியமான பொது அறிவு எனும் நூலாக்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்கள் மட்டுமல்லாது வளரும் இளம் மாணவர்களும் அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு களஞ்சியம் இந்நூல். பொதுத்தமிழ் பற்றி 20 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள நூலும் தேர்வுகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் உதவும். நன்றி: தினத்தந்தி, 20/3/13.