ஆழ்வார்கள் யாவர்
ஆழ்வார்கள் யாவர், வேங்கடகிருஷ்ணன், ஆர்.என்.ஆர்.அச்சகம், பக். 159, விலை 100ரூ.
ஆழ்வார்களில் தமிழ் தலைவன் யார் மாயோன் மேய காடுறை உலகம் என்று தொல்காப்பியர் காலம் முதல் போற்றப்பட்ட வைணவ சமயம், ஆழ்வார்களின் பாசுரங்கள் வாயிலாக வளர்க்கப்பட்டு, ராமானுஜரால் பாரத நாட்டின் பல பகுதிகளிலும் புகழ் பரப்பி திகழ்கிறது. பக்திப் பயிர் வளர்க்க பன்னிரு ஆழ்வார்களின் சில பாசுர நயங்களையும், அவர்களின் பெருமைகளையும் விளக்குவதே இந்நூல். இந்நூலில் 16 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நல்ல முத்தாக இருப்பதால், நூலும் பதினாறும் பெற்ற முத்து மாலையாகத் திகழ்கிறது எனலாம். நித்ய சூரிகளிலே சிலருக்கு எம்பெருமான் தனிப்பட்ட அருள் புரிந்து அவர்களை ஆழ்வார்களாக ஆக்கி, அவர்கள் மூலமாக சாதாரண மக்களைத் திருத்தத் திருவுள்ளம் கொண்டான் (பக். 8). வேதாந்தக கருத்துக்களை செந்தமிழில் கூட்டி, மற்ற ஆழ்வார்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் பொய்கையாழ்வார் (பக். 18). பே அல்லது பேய் என்ற சொல்லின் ஆழ்பொருள் குறித்தும் (பக். 35), திருமழிசையாழ்வாருக்கு உறையிலிடாதவர் எனும் பெருமையின் விளக்கமும் (பக். 58). நம்மாழ்வார் திருவேங்கடத்தானிடம் கொண்ட அளவு கடந்த பக்தி குறித்தும் (பக். 69). கோயில், திருமலை, பெருமாள் கோவில் என்ற மூன்று திவ்யதேசங்களின் உயர்வு குறித்தும் (பக். 70) மென்கிளி என்று துதிக்கப்படும் திருமங்கையாழ்வாரின் சிறப்பு குறித்தும் (பக். 145) நூலாசிரியர் நுட்பத்துடன் விளக்கி உள்ளார். வேதமனைத்துக்கும் வித்து எனும் கட்டுரை ஆய்வு கட்டுரையாகத் திகழ்கிறது பக்.(104). -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 19/10/2014.