திருமால் தரிசனம்
திருமால் தரிசனம், வேணு சீனிவாசன், வையவி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ,
நாலாயிர திவ்ய பிரபந்தம், அதன் உரையாசிரியர்களின் நயம் குறித்தும், உரையாசிரியர்களின் உயர்வு குறித்தும், 18 கட்டுரைகளில், இந்த நூல் பழகு தமிழில் விவரிக்கிறது. பாலும் கண்ட சர்க்கரையும் குடிக்கப் பித்தம் தன்னடையே போமாபோல, பகவதனு பவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக்குவியலைப் போல தீவினைகளுடன் உருமாய்ந்து போகும் என்ற ஈட்டின் விளக்கம் கூறுவது (பக். 39). இறை அறிவு தலைதுக்கி மலரும்போது, இந்த உலக அறிவு கூம்ப ஆரம்பித்துவிடும் என்று செங்கழுநீர்வாய் நெகிழ, ஆம்பல் வாய் கூம்பின எனும் ஆண்டாள் திருப்பாவை அடிகளுக்கு விளக்கம் சொல்வதும் (பக். 45). வண்டுகள் தேன் குடிக்கும் போது விக்கினால் என்ன செய்யும் என்பதை விளக்கியும் (பக்.71). கல்வெட்டுகளில் திருமால் வழிபாடு பற்றிய செய்திகள் சில விளக்குவதும் (பக். 81) சரணாகதி செய்வதற்கு நியதிகள் வேண்டாம் என்பதை பிள்ளைலோகாசாரியரின் ஸ்ரீ வசனபூஷணம் எனும் நூல் கொண்டு விளக்குவதும் (பக். 88) சரமசுலோகத்தை, ஆழ்வார் பாசுரங்கள் கொண்டு விளக்குவதும் (பக். 120) நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு எடுத்துக்காட்டுகள். சிறிய நூலாக இருப்பினும், சிறப்பான நூல். -க.சு. நன்றி: தினமலர், 19/10/2014.
—–
ஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுகள், சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், பக். 152, விலை 70ரூ.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றிய நூல். மொத்தம் 53 விளையாட்டு முறைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கிட்டிபுள்ளு, உப்புக்கோடு, நொண்டி, ஆடுபுலி ஆட்டம், மெல்ல வந்து கிள்ளிப்போ, கிச்சுக்கிச்சு தாம்பாளம், பல்லாங்குழி என, ஒவ்வொரு விளையாட்டுக்களின் பெயரை உச்சரிக்கும்போதே, மலரும் நினைவுகளில் மூழ்கி போகிறோம். இன்றைய தலைமுறைக்கு, இத்தகைய விளையாட்டுகள் பற்றிய தெரிய வாய்ப்பில்லை எனும்போது, வேதனை ஏற்படுகிறது. கணினி விளையாட்டுக்குள் தொலைந்து, சிறு வயதிலேயே கண்ணாடி அணிந்து, தொப்பை விழுந்து, மருந்துக்குள் வாழ்வை நடத்தும் இன்றைய தலைமுறைக்கு, ஆரோக்கியம், கவனம், ஒற்றுமையை கற்றுக்கொடுக்கும், நம் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை, இப்புத்தகம் தோற்றுவிக்கிறது. குழு விளையாட்டுக்களில், அணி பிரிக்கும் வழிவகையான, உத்திப் பிரித்தல், யார் விளையாட்டை துவங்க வேண்டும் என்பதற்கான சாட் பூட் த்ரீ பற்றிய இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. -கலா தம்பி. நன்றி: தினமலர், 19/10/2014.