நாளைய பொழுது உன்னோடு

நாளைய பொழுது உன்னோடு, ஜனகன், கங்கை புத்தக நிலையம், பக். 180, விலை 90ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-348-9.html எழுத்தாளர் சூடாமணி, தன் தாயார் ஸ்ரீரங்கநாயகி பெயரில் நிறுவியுள்ள நாவல் திட்டத்தில் பங்குபெற்று, பரிசு பெற்ற நாவல் இது. ஜனகனின் கை, எழுதி எழுதிப் பழகிய கை. வரிக்கு வரி, ஜனகனின் முத்திரை பளிச்சிடுகிறது. நாவலின் கட்டுமானத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஆன்மீக இழைகள் ஓடுவது தனிச்சிறப்பு. ஓம், சகஸ்ரநாமம் ஆகியவற்றின் மேன்மையையும், ஆசிரியர் விளக்குகிறார். ஓம் என்ற வார்த்தையைப் பற்றி, நம் ஊரில் பல பேருக்குத் தெரியாது. ஓம் என்று உச்சரிப்பதன் மூலமும், தியானம் செய்வதன் மூலமும், உடல் ரீதியாக, மனம் ரீதியாக, மூளை ரீதியாக சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று சொல்கிறார் ஜனகன். இந்த நாவலில், வில்லன் கிடையாது. முக்கியப் பாத்திரங்களான சாமா, சாரங்கன் இருவருமே தியாகிகள். கதைக்களம், கும்பகோணமும், சான்பிரான்சிஸ்கோவும், அறுபது வயதுக்கு மேல் ஆகிவிட்ட கதாநாயகன், அமெரிக்காவுக்குப் பயணமாகி, அங்கே தனக்கு ஒரு பெண்ணைத் தேடி கல்யாணம் ஆகி, இந்தியா திரும்பும் கதையை லாவகமாகச் சொல்லி செல்கிறார் ஜனகன். படிக்கத் தெவிட்டாத பக்கங்கள். அருமையான கள வர்ணனைகள். கண்ணியமான குடும்ப நாவல். -எஸ். குரு. நன்றி: தினமலர், 19/10/2014.  

—-

திருக்குறள் புதுக்கவிதை வடிவில், கிருஷ்ண பிரசாத், காவ்யா, பக். 915, விலை 900ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-261-6.html இந்த நூலாசிரியர், திருக்குறளுக்கு எளிய உரையை, புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார். இது ஒரு புதிய முயற்சி. ஐந்தின் வகை தெரிவான் எனும் தொடருக்கு, புலனைந்து பொறியைந்து, பூதமைந்து, இவை தம்மின் தத்துவமெல்லாம் தெரிந்தே நிலையாக நின்றவரே நீத்தார் எனப்படுவார் என விளக்கமளிப்பதும், சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் என, துவங்கும் குறளுக்குப் பரிமேலழகர், தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரையிலிருந்தும், திருக்களிற்றுப் படியாரிலிருந்தும் மேற்கோள் காட்டி வறிய உரையை, சீர்மிகு செல்வமிங்கு இறையொன்றே அதையுணர்ந்து அவன்பால் நின்றிருந்தால், பழவினைத் தோன்றாது பின் தொடர்ந்து வராது பிறப்பென்னும் பெருஞ்சுழல் அறுந்து அகன்றுவிடும் என எளிமையாக்கி, இனிமையாக்கி தந்துள்ளார். தாம் வீழ்வார் மென்றோன் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு எனும் குறட்பாவிற்கு, சீர்மிகு சித்தாந்தக் கருத்துகளையும் வேதாந்த தத்துவங்களையும் கூறி, அமுத வல்லியே நின்றன் மென்தோளை அணைந்தேன், குமதக் கண்மாலனின் வைகுந்த வாசத்தின் அணைப்பும் இதற்கிணையாமோ? என இனிமை கவிதையாக ஆக்கி உள்ளார். -புலவர் சு. மதியழகன். நன்றி: தினமலர், 19/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *