ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், தமிழில் மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், 10, புலியோன் பஜார், இரண்டாவது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 270, விலை 180ரூ.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தோடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழர்களின் தொன்மையை நிலை நிறுத்துவது, போலவே நூலாசிரியர்கள் முயற்சி அமைந்திருப்பதைப் பாராட்டலாம். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என தமிழில் பாட்டி கால கதைகளை ஞாபகமூட்டும் வகையில் நூலின் முதல் கதையான கடவுளை நோக்கி ஒரு பயணம் அமைந்துள்ளது. பெரியதும், சிறியதுமான 94 கதைகள் மிகவும் எளிமையாக அதே சமயத்தில் உள்ளடக்கம் சிறிதும் குறையாமல் மொழிபெயர்த்துள்ளார் நூலாசிரியர். விலங்குகளோடு மனிதர்கள் பேசுவதும், பாமர மக்களின் நம்பிக்கைகளும், ஆச்சரியங்களும் கதைகள் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. மனிதர்களுக்கு உணர்த்த வேண்டிய நீதி மறைமுகமாக தமிழகத்தில் பாட்டி கதைகளில் இருப்பதைப் போலவே ஆஸ்திரேலியக் கதைகளிலும் இருப்பதைக் காண முடிகிறது. இரண்டு நாய்கள் கதையில் கங்காருவைத் துரத்திச் செல்லும் நாய்கள் வகையில் சிக்கி உணவாவது பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்ற திருக்குறளை நினைவூட்டும் வகையில் உள்ளது. கடைசிக் கதையான கொக்கும் காகமும், சிசுக்களுக்கு நீதியைப் புகட்டும் வகையிலான பாட்டி வடை சுட்ட கதையை நினைவூட்டுகிறது. ஆமைக்கு ஓடுவந்த கதையும், காகம் கறுப்பானதற்கான கதையும் தமிழில் பழங்கதைகளை நினைவூட்டபவையாகவே உள்ளன. வானவில், மீன், மலை கதையானது அம்புலி மாமா கதைகளை நினைவூட்டுவதாக அமைந்தாலும், ராமன் கால்பட்டு பெண்ணாக மாறிய அகலிலகையும் நினைவூட்டுவதாக உள்ளது. ஒவ்வொரு கதையும் யதார்த்தமாக ஒரு கருவை மையமாக வைத்து பேசப்பட்டு வந்திருக்கிறது. ஒளியும் ஒலியுமே உலகை வைத்து பேசப்பட்டு வந்திருக்கிறது. ஒளியும் ஒலியுமே உலகை வழிநடத்தியவை. அந்த வகையில் பேச்சு ஒலியால் உருவான கதைகள் மனித வரலாற்றைப் பாதுகாக்கும் பெட்டகங்கள், ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகளைப் படிக்கும்போது நமது முன்னோரின் வாழ்க்கையைப் படித்த மன நிறைவு. நன்றி: தினமணி,20/10/2013.  

—-

 

வாய்ப் புற்று நோயும் விழிப்புணர்வும், டாக்டர் கே.எம்.கே. மஸ்தான், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 45ரூ.

வாய்ப்புற்று நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், அதன் விளைவுகள், தடுக்கும் முறைகள், பரவும் முறைகள், சிகிச்சை முறைகள் போன்ற அனைத்து விவரங்களும் படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *