இங்கே நிம்மதி

இங்கே நிம்மதி, என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், சென்னை, பக். 160, விலை 130ரூ.

ஆழ்மன சக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், நாவல்கள், சிறுகதைகள் என்று இவரது படைப்புகள் முக்கியத்துவம் பெற்றவை. இவற்றில் சில இலக்கியச் சிந்தனை உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளவை. அந்த வகையில் இந்நூலில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் வரும் எல்லா பிரச்சினைகளையும் சுமார் 42 கட்டுரைகளில் பிரித்துக் காட்டி, இவற்றிற்கு தீர்வு காண்பது எப்படி என்பதையும் மிக எளிமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர். முல்லா, ஜென் புராண சம்பவங்கள் போன்ற குட்டிக் கதைகள் மூலமாகவும், பிரபலஸ்தர்கள் சிலரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் மூலமாகவும் யதார்த்தத்தை விளக்கி, பிரச்னைகளுக்கான முடிச்சுகளை அவிழ்த்து காட்டுகிறார் ஆசிரியர். ஒருமுறை தான் பெரிதும் மதிக்கும் குள்ளச்சாமி என்ற சித்தர், அழுக்கு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி வருவதைக் கண்ட மகாகவி பாரதியார், பதறிப்போய், ஐயா, ஏனிந்த கோலம்?’ என்று கேட்க, ‘நான் குப்பைகளை வெளியே சுமந்து கொண்டிருக்கிறேன்; நீ உள்ளே சுமந்து கொண்டிருக்கிறாய்’ என்று கூறிச் சென்றது, பாரதியை மிகவும் சிந்திக்க வைத்தது. இது நம்மையும் சிந்திக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி என்று கூறி, நம் மனதில் உள்ள துக்க சுமைகளை களையும் வழிமுறைகளை ஒரு கட்டுரையில் ஆசிரியர் விளக்கியுள்ளது மனதைத் தொடுகிறது. இப்படி இந்நூலிலுள்ள அனைத்து கட்டுரைகளுமே படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. பரக்கத். நன்றி: துக்ளக், 4/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *