இடிந்தகரை-சிறைபடாத போராட்டம்
இடிந்தகரை-சிறைபடாத போராட்டம், சுந்தரி, ஐந்திணை வெளியீட்டகம், 4ஏ, 29, முகமதியர் தெரு, மந்தக்கரை, விழுப்புரம் 2, பக். 200, விலை 160ரூ.
இடிந்தகரையில் நடைபெற்று வரும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக் களத்தில் பங்கேற்று, 98 நாள்கள் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நூலாசிரியர் சுந்தரி. அவர் மீது 12 வழக்குகள். 8ஆம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் சுந்தரிக்கு இப்போது அணுஉலை குறித்து சர்வதேச அளவிலான அறிவும் வளர்ந்திருக்கிறது. சிறையிலிருந்து பிணையில் விடுக்கப்பட்ட பிறகு, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த 50 நாள்களில் இந்த நூலை எழுதியிருக்கிறார். திருச்சி சிறைச்சாலையில் அவர் சந்தித்த துயரங்களையும், அதனை எதிர்த்து நடத்திய போராட்டங்களையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். மாதவிடாய் நாளில் நடத்தப்பட்ட நிர்வாண சோதனை என்ற கொடூரம், அதன் பிறகு சுந்தரி நடத்திய போராட்டம், சிறைக்குள் சாம்ராஜ்ஜியம் நடத்திய ரவுடிப் பெண்ணை அடக்கியது. கழிப்பறையில் கழிவுகள் நிரம்பி வழிந்தபோது அவற்றை வாளியில் எடுத்துச் சென்று வெளியே ஊற்றிய சிறைவாசிகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியது இப்படிப் பல நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார் சுந்தரி. ஏதும் அறியாத எங்களுக்கு இப்போது பேச்சுக் கலை வந்திருக்கிறது. எழுத்துக்கலை வந்திருக்கிறது. ஓவியக் கலை வந்திருக்கிறது என இடிந்தகரை போராட்டம் தந்த அற்புதங்களை ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அவர். தமிழில் பெண் போராளியொருவரின் இப்படிப்பட்ட பதிவு இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. நன்றி: தினமணி, 13/1/2014.
—-
சிங்களன் முதல் சங்கரன் வரை, வானவில் புத்தகாலயம், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 80ரூ.
சிங்களன் முதல் சங்கரன் வரை என்ற நூலின் தலைப்பை பார்த்தால் இந்த இரண்டு தலைப்புகளிலான செய்திகள் மட்டுமே இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் என்று நினைப்பது தவறாகும். இலங்கை பிரச்னைகளில் தலைவர்களின் பங்கு குறிப்பாக மறக்கப்பட்டும் கொண்டிருக்கிற தலைவர்களின் பெருமைகளை நினைவுபடுத்துவதில் நூலாசிரியர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து நூலாசிரியர் சுப. விரபாண்டியன் தமது கருத்தை நடுநிலையுடன் ஆணித்தரமாக எழுதியுள்ளார். சிந்தனைக்கு விருந்தளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 22/1/2014.