இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்
இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம்.
பல நூற்றாண்டுகளாக கற்பதற்கு கடினமானதாக கருதப்பட்ட, இந்திய தத்துவ நூல்களை எளிமைப்படுத்தி, அவற்றைப் பற்றிய புரிதலை நமக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது. இந்த நூலிலுள்ள 28 தொடர் கட்டுரைகள், இந்திய மண்ணில் வேர்விட்டு வளர்ந்துள்ள தத்துவங்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், பண்டைய மத்திய கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலைகளோடு ஒப்பிட்டு, தத்துவங்களின் உண்மையான மதிப்பையும், தேவையையும் நமக்கு அறிமுகம் செய்கின்றன. இந்த நூல் சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூலகத்தில் படிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 27/4/2014.
—-
மரியா மாண்டிசோரியின் குழந்தைமை ரகசியம், தமிழில் சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், பக். 320. விலை 200ரூ.
குழந்தைகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, உலகம் ஏற்றுக் கொண்ட கல்வி முறையை உருவாக்கியவர் மரியா மாண்டிசோரி. தனது ஆய்வுகளை பத்துக்கும் மேற்பட்ட நூல்களாக வெளியிட்டுள்ள அவர், தென்னிந்தியாவில் ஆய்வு நடத்தியபோது அவருக்கு உதவியாக இருந்தவர் சி.ந. வைத்தீஸ்வரன். இவர் 1949இல் மொழிபெயர்த்த நூலை மறுபதிப்பு செய்துள்ளது முல்லை பதிப்பகம். குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகளின் மீது பெரியவர்கள் தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதால் அவர்களின் இயல்பான வளர்ச்சி தடைப்பட்டு, மனநோய்க்குரிய வித்துகள் தோன்றுகின்றன என்றார் மரியா மாண்டிசோரி. குழந்தைகளின் மனம், பெற்றோரின் நடத்தைகள், ஆசிரியரின் கடமை போன்றவற்றை இந்நூல் விளக்குகிறது. மாண்டிசோரியின் கல்வி முறையே சரியானது. குழந்தைகளின் எதிர்காலத்துக்குரியது என்பதை ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நூல் மறுபதிப்பு கண்டிருப்பது வரவேற்கத்தகுந்தது. கல்வியியல் மாணவர்களுக்கான பாட நூலாக இருந்தாலும், மாணவர்களின் உளவியல் குறித்த அடிப்படை அம்சங்களை ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் அறிந்து கொள்ளும்வகையில் எழுதப்பட்டுள்ள அவசியமான நூல். நன்றி: தினமணி, 21/4/2014.