இந்தியத் தேர்தல் வரலாறு
இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 650ரூ.
சுதந்திர இந்தியாவில் 2014 வரை நடந்த பொது தேர்தல்கள், தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களைப் பற்றிக் கூறும் நூலாகத் தோற்றமளிக்கும் இந்நூல், உண்மையில் இந்தியாவின் சமகால வரலாறு. ஒவ்வொரு தேர்தலின்போதும் முன் எழுந்த பிரச்னைகள், ஒவ்வோர் அரசியல் கட்சிகளும் தேர்தலை, எதிர்கொண்டவிதம் எல்லாம் இந்நூலில் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல,தேர்தலுக்குப் பின்பு நாட்டில் நடந்த பல்வேறு நிகழ்வுகள், முக்கிய திருப்பங்கள், நாட்டில் நிகழ்ந்த அரசியல், பொருளாதார மாற்றங்கள், அதன் தொடர்ச்சியாக அடுத்த தேர்தல் களத்தில் போராட்டங்கள் நிகழ்வது என அனைத்து விவரங்களும் அற்புதமாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. கட்சிகள் உடைவது, புதிய கட்சிகள் உருவாவது, பழைய கூட்டணிகள் கலைந்துபோவது, எதிர்பாராத புதிய கூட்டணிகள் தேர்தல் களத்தில் தோன்றுவது என இந்தியத் தேர்தலின் வரலாற்று விநோதங்களும் நிகழ்ந்த நல்லலையும் இந்நூலில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 1957 தேர்தலில் பெரியார், “காமராஜர் பச்சைத் தமிழர். அவருக்காக காங்கிரஸை ஆதரிப்பதில் தவறில்லை” என்று கூறியது, “பாகிஸ்தானிடம் லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு திமுக தேர்தலில் போட்டியிடுகிறது” என்று கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி தேர்தல் மேடைகளில் பேசியது, 1957 ஜுன் 25இல் நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது, 1977இல் நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டது, 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்தது என வரலாற்று முக்கியத்துவம் பல சம்பவங்கள் இந்நூலில் கூறப்பட்டிருக்கின்றன. சஞ்சீவ் காந்தி மரணம், இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது, சீக்கியர் பிரச்னை, பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கை, ஈழப் பிரச்சினை, அமைதிப்படை இலங்கைக்குச் சென்றது, ராமர் கோயில் இடிப்பு, அதற்குப் பின்பு நிகழ்ந்த கலவரங்கள், 2014இல் நரேந்திரமோடி பிரதமரானது உள்ளிட்ட பல சமகால வரலாற்று நிகழ்வுகள் நூலை வாசிப்பவரைக் கடந்த காலத்துக்கு இழுத்துச் செல்கின்றன. நூலாசிரியரின் கடும் உழைப்பு பாராட்டத்தக்கது. நன்றி: தினமணி, 28/12/2015.