இந்தியப் பயணக் கடிதங்கள்

இந்தியப் பயணக் கடிதங்கள், எலிஸா ஃபே, தமிழில் அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.

பல்வகை இடர்கள், துன்பங்களுக்குப் பின் களிப்பூட்டும் நல் ஓய்வு அளிக்கும் இடமாக இந்த நகர் அமைந்திருக்கிறது. வசீகரிக்கும் அழகுடன் இந்த நகர் மிளிர்கிறது. வீடுகளும் பொதுக் கட்டடங்களும் பெரிதாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றன. இவை இத்தாலியில் இருக்கும் உணர்வை அளித்தன. தடையின்றி வழிந்தோடும் ஆடை அணிகலன்களின் விற்பனை. பகட்டையும் ஒய்யாரத்தையும் வெளிப்படுத்தும் பல்லக்குகள். அழகான கோச்சு வண்டிகள். எண்ணிக்கையற்ற வேலையாட்கள். பகட்டு நிறைந்த இலகுவான சொகுசான வாழ்க்கை. அளப்பற்ற செல்வ வளம். இப்படி ஐரோப்பிய சுவையுணர்வுடன் இணைந்து வெளிப்படும் ஆசியாவின் உயர்வை அனைத்துத் திசைகளிலும் பார்க்க முடியும். இந்த நகரில் பெண்கள் மிகவும் நாகரிகமான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள். இங்கு கடல் அலைகள் தவிர்த்து வேறொன்றும் அவ்வளவு பயங்கரமானது இல்லை. 1780ம் ஆண்டு சென்னை எப்படி இருந்தது என்பதை தான், நேரில் பார்த்த அனுபவமாக பிரிட்டிஷ் பெண்மணி எலிஸா ஃபே எழுதி இருக்கும் சித்திரம்தான் இது. இங்கிலாந்தைச் சேர்ந்த எலிஸா, வழக்கறிஞரான ஃபே என்பவரைத் திருமணம் செய்து கொல்கத்தாவுக்கு வருகிறார். இந்தியாவில் ஒரு மகாராணியைப் போல வாழலாம் என்ற நினைப்புடன் வந்தவர் எதிர்கொண்ட தொல்லைகளும், துன்பங்களும் வாசிக்க வாசிக்க துயரம் ஏற்படுத்துபவை. இவர், கள்ளிக்கோட்டையில் கைது செய்யப்படுகிறார். அதில் இருந்து விடுபட்டு, சென்னை வழியாக கொல்கத்தாவுக்குச் செல்கிறார். கணவருடன் வாழ்க்கை தொடரவில்லை. பிரிகிறார். இங்கிலாந்து செல்கிறார். அவரால் அங்கு இருக்க முடியவில்லை. மீண்டும் கொல்கத்தா வந்து ஒரு சிறு கடை நடத்தி இந்தியாவிலேயே வாழ்கிறார். 60-வது வயதில் இங்கேயே இறந்துபோகிறார். தான் எதிர்கெண்ட வாழ்க்கையை கடிதங்களாக எலிஸா எழுதினார். அந்தக் கடிதங்களின் மொழியாக்கம்தான் இந்தப் புத்தகம். எத்தனையோ பயணிகள் திட்டமிட்டு நடத்திய பயணங்களின்போது திரட்டிய செய்திகளை எல்லாம்விட மேலானதாக எலிஸாவின் பார்வை இருக்கிறது. ஏனென்றால், இவர் திரட்டியது செய்திகள், வரலாறு அல்ல. மனித மனங்களை, பழக்க வழக்கங்களை, வாழ்வியலை இத்தாலி தொடங்கி தென் இந்தியா வரைக்குமான மனங்களை இந்தப் புத்தகத்தின் மூலமாக அறிய முடிகிறது. திருமணத்தின்போது மணப்பெண்ணின் முன்னாள் காதலர்கள் வருகை தருவதை மதிக்கப்படும் வழக்கமா இத்தாலியில் பின்பற்றினார்கள் என்பது முதல்… சென்னையில் தன் கொண்டைக்குள் கத்தி ஒன்றை முழுமையாக நுழைத்துக் கொண்ட மனிதனைப் பார்த்தது வரை எத்தனையோ அபூர்வமான காட்சிகள். ஒரு கடிதத்தை முடிக்கும்போது எலிஸா சொல்கிறார்: காகிதம் முழுவதையும் எழுதித் தீர்த்துவிட்டேன். ஆகவே என் இதயம் பேசுவதை கற்பனை செய்யும் வேலையை உங்களிடம் விட்டுவிடுகிறேன். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 10/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *