இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும்
இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும், என்.டி. ராமகுமார், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 170ரூ.
தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சிவலிங்கத்திருமேனி நர்மதை நதியிலிருந்து எடுத்துவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். வடநாட்டில் பல சிவாலயங்களில் இடம்பெற்றுள்ள லிங்கத் திருமேனிகள் இநத் நர்மதையிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கங்கள்தான் என்கிறார் இந்த நூலின் ஆசிரியரான என்.டி. ராமகுமார். நர்மதை நதியில் கிடைக்கும் எல்லாக் கூழாங்கற்களுமே சிவ லிங்கங்களாகக் கருதப்படுகின்றன. ஒங்காரரேஷ்வர் தலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள தாடிகுண்ட் என்னுமிடத்திலுள்ள ஆழமான பாறைக்கிணறுகளில் உயரத்திலிருந்து விழும் நர்மதை நதி நீர் வெள்ளத்தில் அடித்துவரப்படுகிற பெரும் கற்கள் பல ஆண்டுகளாகச் சுழன்று சுழன்று, இப்படி பாணலிங்கங்கள் ஆக உருமாறுகின்றனவாம். வீடுகளில் வைத்து வழிபடப்படுகிற பாணலிங்கங்கள் ஆறு அங்கலத்துக்குள்தான் இருக்க வேண்டுமாம். இன்றைக்கு வெளியே தெரியாமல் அந்தர்வாகினியாக ஓடிக்கொண்டிருக்கிற சரஸ்வதி நதியின் தண்ணீரால்தான் பழங்காலத்தில் அரசர்களுக்கு முதலில் பட்டாபிஷேகம் செய்வார்களாம். அதன் பிறகே கங்கை முதலான புண்ணிய நதிகளின் நீரால் அபிஷேகம் செய்வார்களாம். ஹர்ஷமன்னன் தன்னுடைய தந்தையின் உடலை சரஸ்வதி நதிக்கரையிலேயே தகனம் செய்திருக்கிறான். கண்ணன் ஆடிப்பாடி மகிழ்ந்த யமுனை நதிக்கரை பிருந்தாவனத்தில் இன்றளவும் ஒருவரையொருவர் சந்திக்கும்போதே ராதே என்று அழைத்தே முகமன் கூறிக்கொள்கிறார்களாம். தென்னகத்து நதிகளில் மிக நீளமானதாக உள்ள கோதாவரி, ஆந்திர மாநிலத்தில் அது கடலோடு கலக்குமிடத்தில் மூன்று முதல் ஐந்து கி.மீ. அகலமுள்ளதாக விரிந்துவிடுகிறதாம். இங்கே ஒரு காவிரியின் தண்ணீருக்கே பங்குச் சண்டை நடக்கிறது. ஆனால் இமயமலையில் மானசரோவருக்கு அருகில் உற்பத்தியாகும் பிரும்மபுத்திரா நதியின் தண்ணீரை இந்தியா, சீனா, திபெத், வங்கதேசம் ஆக நான்கு நாடுகள் பகிர்ந்துகொள்கின்றன என்கிற செய்தி எத்தனைபேருக்குத் தெரிந்திருக்கும்? விந்திய மலையில் உற்பத்தியாகும் 580 கி.மீ. நீளமுள்ள மாஹி நதியில் ராஜஸ்தானில் அணைகட்டி நீர் தேக்கி 17 மதகுகளின் வழியாக மாநிலம் முழுவதற்கும் குடிநீர் அனுப்பப்படுகிறதாம். வெள்ளியங்கிரிக் குன்றுகளில் உற்பத்தியாகும் 180 கி.மீ. நீளமுள்ள நொய்யல் ஆற்றில் சேரும் மழைவெள்ளம் கொடுமுடி அருகே காவிரியில் கலப்பதற்கு முன் 32 அணைகளில் தேக்கப்பட்டுப் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். தருமமிகு சென்னையை இன்றைக்கு வளப்படுத்துகிற கூவம் ஆறு ஒரு காலத்தில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து சென்னை வரை ஓடியதாகவும் பின்னாட்களில் நதியின் போக்கு மாறிவிட்டது என்றும் நம்பப்படுகிறது. மேற்கிலிருந்து கிழக்காக ஓடி ஹூப்ளியில் கடலை அடையும் தாமோதர் நதிப்பகுதியில் கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் மிக அதிகமான வெள்ளப்பெருக்கு உண்டாகி கிராமங்களும் நகரங்களும் மூழ்கிப்போயினவாம். அதனால் இந்த நதியைத் துயரநதி என்றே அழைப்பார்களாம். இப்படிப் பல அரிய தகவல்கள் தவிர புராணக்கதைகளும் வரலாற்றுச் செய்திகளும் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. கங்கை முதலான இந்திய நதிகள் அனைத்தையும் பற்றி நூற்றுக்கணக்கான அவற்றின் துணை நதிகளையும் பற்றி சுவையாக எழுதப்பட்டிருக்கிறது. கூடவே பல நதிகள் இன்றைக்குப் பாழாகிக்கொண்டிருக்கும் அவல நிலையைப் பற்றிய கவலையையும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர். மிகவும் பயனுள்ள நல்ல நூல் இது. அச்சுப் பிழைதான் கொஞ்சம் கண்களை உறுத்துகிறது. -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 5/7/2015.