இந்திய இன்ஷுரன்ஸ் கோடீஸ்வரர்கள்-உயர்ந்த மனிதர்களின் உண்மைக் கதைகள்
இந்திய இன்ஷுரன்ஸ் கோடீஸ்வரர்கள்-உயர்ந்த மனிதர்களின் உண்மைக் கதைகள், கனினிகா மிஸ்ரா, தமிழில்-உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், பக். 232, விலை 150ரூ.
இந்திய மக்கள் தொகையில் மூன்று சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். இந்த நிலையில் ஆயுள் காப்பீட்டுத் துறை வளர்ச்சியை மட்டுமே காண முடியும். இந்த துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதையில் முன்னேற்றம் என்பது மட்டுமே ஒரே வழியாக இருக்க முடியும் என்பது ஓரளவுக்கு உண்மை. காப்பீட்டுத் துறையில் முகவர்களாக வெற்றி கண்ட ஒன்பது பேர்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் இது. காப்பீடு முகவர்களான உள்ளவர்கள் நேரடியாக தாங்கள் சார்ந்துள்ள நிறுவனங்களின் ஊழியர்களாக இருப்பதிலை. ஒருவரின் அனுபவத்தில் குறிப்பிட வேண்டுமானால் முகவர்களுக்கு குறிப்பிட்ட அலுவலக நேரம் கிடையாது. தங்கள் வேலை நேரங்களை அவர்களே முடிவு செய்யலாம். விற்பனை செய்யும் திட்டங்கள் அடிப்படையில் வருமானம். அதே சமயத்தில் வருமானத்துக்கு எல்லையே இல்லை. ஆனால் நிரந்தர வருமானத்துக்கு விழையும் நடுத்தர வாழ்க்கையில் முகவர் தொழில் பாதுகாப்பற்றது என்கிற எண்ணத்தை ஓரளவு போக்க முயற்சிக்கும் இந்தப் புத்தகம், சராசரி வாசகனுக்கு எவ்வாறு உதவிகரமாக இருக்கும் என்று கூற முடியாது. பெரும்பாலும் காப்பீட்டுத்துறையில் ஈடுபடுபவர்களின் கையேடு போல இருக்கிறது. நெருடலான தமிழாக்கம். சில சாதராண சொற்களுக்குப் பொருள் தெரியாமல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தலைப்பே கூட ஆங்கில மில்லியனேரை லட்சாதிபதியாக கூறாமல், ஒரேயடியாக கோடீஸ்வரனாக்கிவிட்டார்கள். நன்றி: தினமணி, 23/12/13.