இந்திய இலக்கியச் சிற்பிகள் – குமுதினி

இந்திய இலக்கியச் சிற்பிகள் – குமுதினி, பிரேமா நந்தகுமார், சாகித்ய அகாடமி, பக். 135, விலை 50ரூ.

பிரிட்டிஷ் காலத்திய பெண்ணிய எழுத்தாளர்‘ பெரும்பாலான இந்திய பெண்கள் கல்வியறிவில்லாமல் இருந்த காலகட்டத்தில், மிகவும் ஆச்சாரமான அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர், குமுதினி என்று தமிழுலகால் அறியப்பட்ட, ரங்கநாயகி தாத்தம். அவரது குடும்பத்தில், ஆண்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்களாக இருந்தும், பெண்கள் கல்வியறிவற்றோராக வாழ்ந்தனர். அந்தக் கால குழந்தை திருமணத்திற்கு, குமுதினியும் விதிவிலக்கில்லை. இருந்தும் தன் தணியாத கல்வி தாகத்தாலும், தந்தையின் உதவியாலும், கணவரின் ஆதரவாலும், தானே முயன்று தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று சிறந்து, எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதை, நாவலாசிரியர், நாடக ஆசிரியர் என சிறகு விரித்தார். ராஜ விசுவாசியாக விளங்கிய புகுந்த வீட்டில், காந்தியவாதியாக மலர்ந்தார். பெண்ணிய சிந்தனையாளராக பரிணமித்தார். நூலாசிரியர் பிரேமா நந்தகுமார், குமுதினியின் மருமகள் என்பதாலும், அவருடன் பழகும் வாய்ப்பு அதிகம் கிடைத்ததாலும், நிகழ்வுகள் ஒவ்வொன்றும் யதார்த்தமான நூலுள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமுதினியின் கட்டுரைகள், ஆனந்த விகடன், கலைமகள், மங்கை இதழ்களில் பிரசுரிக்கப்பட்டன. 1948ல் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பைப் படித்த கல்கி, பின்வருமாறு பாராட்டுகிறார் ‘பதினைந்து ஆண்டிற்கு முன் குமுதினி எழுதிய முதல் கட்டுரையைப் படித்த உடனேயே, எனக்கு ஒரே வியப்பாய் போய்விட்டது. தமிழ் பாஷையை இவ்வளவு லாவகமாக் கையாண்டு எழுதும் இந்தப் பெண்மணி யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ என்று பிரமித்துப் போனேன்’ என்று கூறுவதோடு, ஆங்கிலக் கட்டுரையாளர்களான ஏ.ஜி. கார்டினர் மற்றும் ஹிலேரி பெல்லாக்குடன் குமுதினியை ஒப்பிடுகிறார். ரவீந்திரநாத் தாகூரின் ‘யோகாயோக்’ நாவலை, இவர் தமிழில் மொழிபெயர்த்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பெரும்புகழ் பெற்றது. ஜே.சி. குமரப்பாவின் இரு நூல்களைத் தமிழில், ‘கிராம இயக்கம், ஏசுநாதர் போதனை’ என மொழிபெயர்த்தார். இந்த நூல்கள் மூலத்தினை பளிங்குபோல் விளக்குகின்றன என, குமரப்பாவே பாராட்டி உள்ளார். நம்மாழ்வாரின் நூறு பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். காந்தியடிகள் குமுதினிக்கு எழுதிய கடிதங்களும், பெண்களுக்குச் சிறந்த சேவை புரிந்த திருச்சி சேவா சங்கத்தை உருவாக்கிய நிகழ்வுகளும், நூலுள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்ணியத்திற்கு பெருமை சேர்க்கும் நூல். -சு. மதியழகன். நன்றி: தினமலர்,18/10/15.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *