இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி
இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி, எல். நடராஜன், தமிழாக்கம்-ஆர். நல்லக்கண்ணு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-1.html
இந்தியா ஒரு விவசாய நாடு என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அது விவசாயப் புரட்சிகளின் நாடு என்பதும், அதனால்தான் காந்தி ஒரு இந்திய விவசாயியின் புறத்தோற்றத்தைப் பூண்டு இந்திய விடுதலையை வென்றெடுக்க வேண்டி வந்தது. விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகவும் தங்கள் மீதான கொடுமைகளை எதிர்த்தும் பல கலகங்களை நிகழ்த்தினார்கள். அப்படி நடந்த முக்கியமான போராட்டங்கள் குறித்த ஆழமான பார்வை கொடுக்கிறது இந்த நூல். சந்தால் புரட்சி, அவுரி விவசாயிகள் போராட்டம், பாப்னா, போக்ரா விவசாயிகள் போராட்டம், மைசூர் விவசாயிகள் எழுச்சிஎன பல்வேறு போராட்டங்களின் வழியே நிலவரி, ஜப்திக் கொடுமை, லேவாதேவி, ஆங்கிலேய ஆட்சியின் ஒடுக்குமுறைகள் என இந்திய விவசாயிகளின் துயரங்களை இந்த நூல் எழுதிச் செல்கிறது. சுதந்திர இந்தியாவில் அன்னியர்களுக்கு எதிராக இந்திய விவசாயிகள் இன்னும் மூர்க்கமாகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதுதான் மாபெரும் வரலாற்று அவலம். நன்றி: குங்குமம், 25/3/2013.
—-
மந்திரஸ்வர முனிவர் இயற்றிய பலதீபிகை, சு.ஏ. குமாரஸ்வாமி ஆச்சாரியார், ஆனந்த நிலையம், சென்னை 17, பக். 248, விலை 200
பராசரர், ஆரிய ஸ்ரீபதி சத்தியாசாரியார், அத்திரி, மணித்தர், சாணக்கியர், மயன் போன்றர்களின் நூல்களையும், கருத்துக்களையும் தழுவி 900 சுலோகங்களை வடமொழியில் மந்திரேஸ்வர முனிவர் எழுதினார். இதைத் தமிழில் மிளசூர் வேங்கட கிருஷ்ணய்யர் மொழி பெயர்த்தார். நூலாசிரியர் இதை புதுப்பித்து திருத்தம் செய்து பல விளக்கங்களுடன் தந்துள்ளார். 1940ம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பதிப்பில் இல்லாத சுலோகமேற்கோள்கள், விளக்க உரை, சுமார் 300 சுலோகங்கள் இப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. ஜோதிட பொது விதிகள், தசவர்க்கம், திரிகோணம், தொழில், ஆயுள், ராஜயோகங்கள், களத்திரம், மரணம், அஷ்டவர்க்கம், கிரக சேர்க்கையின் பலன்கள் போன்றவை விரிவாகக் கூறப்பட்டுளளன. ஜோதிடர்களுக்கு ஏற்படும் பல சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள உதவும் அற்புதமான அரிய நூல். இப்போது வழக்கத்தில் உள்ள சொற்களை அடுத்த பதிப்பிலாவது பயன்படுத்தி, எளிமைப்படுத்தினால், ஜோதிடர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் இந்நூல் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி, 28/11/2011.