இயற்கை வழியில் இனிய பிரவசம் (ஒரு தகப்பனின் அனுபவ குறிப்புகள்)

இயற்கை வழியில் இனிய பிரவசம் (ஒரு தகப்பனின் அனுபவ குறிப்புகள்). ப. கலாநிதி, செம்மை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 80, விலை 70ரூ.

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை கட்டாயமா? இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கால்மாட்டில், விளக்கேற்றி வைத்து விட்டதால், ஆங்கில மருத்துவ முறைகள், அரியணையில் அமர்ந்துவிட்டன. பெரும்பாலான பிரசவங்கள், அறுவை சிகிச்சையில் முடிகின்றன. அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமானதற்கு கூட்டுக்கு குடும்ப வாழ்வு சிதைந்ததும் ஒரு காரணம். இன்றைய நிலையில் மீண்டும், மரபு வழி மருத்துவ முறைகளின் மேல் கவனம் திரும்ப துவங்கி உள்ளது. ஊடகவியலாளர் கலாநிதி, மரபு வழி மருத்துவரின் வழிகாட்டுதலால், தன் மனைவிக்கு தானே சுகப்பிரசவம் செய்ததை, உயிர் உருக எழுதியுள்ளார். முன்னுரையில் நூலாசிரியர் எழுதியதைபோல், இது மருத்துவ நூலோ அல்லது ஆய்வு நூலோ அல்ல. ஒரு பெண்ணின் கணவனாக, ஒரு குழந்தையின் தகப்பனாக, 12 மாதங்களில் கண்டுணர்ந்த விஷயங்களின் அனுபவ தொகுப்பு. நூலாசிரியருக்கு ஆறு மாதமாக, உயிரே போய் விடும் அளவிற்கு கடும் இருமல். பல்வேறு அலோபதி மருந்துகளால் சரிப்படுத்த முடியாததால் தற்கொலை எண்ணமும் துளிர்விட்டிருக்கிறது. இறுதியில் மரபு வழி மருத்துவர் ஏங்கெல்ஸ்ராஜா மூலம், இரண்டு வாரத்தில் ஒட்டுமொத்த இருமலும் குணமானதை, முதல் அத்தியாயத்தில் கண்ணீர் வழிய எழுதி இருக்கிறார். இதிலிருந்து இயற்கை வழி மருத்துவத்தின் தேவை துவங்குகிறது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, பிரசவத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என, அலோபதி மருத்துவ முறை கூறி வரும் நிலையில், அதை முன் வைத்து, பெரிய அளவிலான வர்த்தம் நடந்து வருவதை, இந்நூல் வெளிச்சப்படுத்துகிறது. அதேநேரம் கிராமப்புறங்களில், 200ரூபாய் செலவில், சுகப்பிரசவங்கள் நடந்து வருவதும் மேற்கோள் காட்டப்படுகிறது. பிரசவ அறுவை சிகிச்சையில் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும், நூலில் விளக்கப்படுகிறது. இயற்கை வழியில் குழந்தை பெற்றுக்கொள்ள பெற்றோர் விரும்பினால், கருவுறுதலுக்கு முன்னதாக செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்தும், நூலில் வழிகாட்டப்பட்டுள்ளது. குழந்தையை பெற்றெடுத்த சவீதா கலாநிதியும், தன் அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். பிரசவத்தின் போது கொடி சுற்றிக் கொண்ட குழந்தையை, அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும் என்ற அலோபதி மருத்துவ முறையின் கோட்பாட்டை, இந்த நூல் தகர்த்துள்ளது. மரபு வழி மருத்துவத்தில், ஆர்வம் உள்ளோர், கட்டாயம் இந்த நூலை படிக்கலாம். -அ.ப. இராசா. நன்றி: தினமலர், 1/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *