ஹிட்லர்
ஹிட்லர், மருதன், கிழக்குப் பதிப்பகம், சென்னை, பக். 212, விலை 150ரூ.
மவுசு குறையாத ஹிட்லர் உலக வரலாற்றின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்திய ஹிட்லர் போன்றவர்களைப் பற்றி எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் அவற்றைப் படிக்கும் ஆர்வம் மட்டும் குறைவதே இல்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவில் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. வேறெங்கோ தப்பிச் சென்று இயற்கையாக மரணம் அடைந்தார் என்று மாற்றுச் சிந்தனையுடன் எழுதப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையே நூற்றுக் கணக்கில் இருக்கும். தமிழில் இரண்டாம் உலகப் போர் சார்ந்து எழுதப்பட்ட ஹிட்லரின் வரலாறுகளின் வரிசையில், அவரைப் பற்றிய தனிப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது, ஹிட்லர் வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள் என்று பலர், இனி மாற்றியமைக்க முடியாது எனும் அளவுக்கு ஹிட்லர் பற்றிய கண்ணோட்டத்தை உலகமெங்கும் நிலைபெறச் செய்துவிட்டார்கள். அதே சமயம், அவரைப் புதிய கோணங்களில் அணுகி ஆய்வு செய்து புத்தகமாக வெளியிடுபவர்களும் உண்டு. அந்த வகையில் யூதர்களை அழித்தொழித்த ஹிட்லரைப் பற்றி ஜெர்மானியர்களிடம் இருந்த கருத்து என்ன? அவரது செயல்பாடுகளைத் தீர்மானித்ததில் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் பங்கு என்ன? நாஜிக்கள் என்னதான் செய்தார்கள் என்று பல விஷயங்களை இந்த நூல் முன்வைக்கிறது. நன்றி: தி இந்து, 29/12/2014.
—-
டார்வின் ஸ்கூல், ஆயிஷா இரா. நடராசன்,பாரதி புத்தகாலயம், பக். 112, விலை 75ரூ.
விலங்குகளின் பள்ளியில் வேலைவாய்ப்பு டாக்டர் டூலிட்டில் தெரியுமா? ஹியூக்ஜான் லாஃப்டிங் எனும் பிரிட்டிஷ் எழுத்தாளர் உருவாக்கிய பாத்திரமான டூலிட்டில் விலங்குகளுடன் பேசும் திறன் கொண்டவர். கிட்டத்தட்ட இதேபோன்ற திறன் கொண்ட சிறுவன், விலங்குகள் நடத்தும் பள்ளியில் எடுப்பு வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்த பின்னர், அதில் சேர முடிவெடுக்கிறான். விளம்பரத்தைச் சாதாரண மனிதர்களால் பார்க்க முடியாது என்பதுதான் இதில் முக்கியம். சிறுவனுக்கு, ரிச்சர்ட் பார்க்கர் எனும் நாய் (‘லைஃப் ஆஃப் பை’ நாவல்/திரைப்படத்தில் வரும் புலிக்கும் இதே பெயர்தான்), மாரி எனும் ஆந்தை, லீலா எனும் பூனை, கிளி, பொன் வண்டு, வாத்து, முயல் என்று பல பிராணி நண்பர்கள் உண்டு. அந்தப் பள்ளியில் சேர அந்தச் சிறுவன் மேற்கொள்ளும் பயணம்தான் ‘டார்வின் ஸ்கூல்’. இந்தக் கதையினூடாகவே. பரிணாமவியல், டார்வினின் இயற்கைத் தேர்வுக் கோட்பாடு ஆகிய விஷயங்கள் சிறுவர்களுக்குப் புரியுமாறு எளிமையாக விளக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) வென்ற ஆயிஷா இரா. நடராசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், சிறுவர் இலக்கியத்துக்குப் புதுவரவு. நன்றி: தி இந்து, 29/12/2014.